பண வசூல்? விளக்கம் கேட்ட பொருளாளர்.. மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என மிரட்டிய மாஜி மா.செ! பாஜகவில் பரபர
திண்டுக்கல்: பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர், தொழில் நிறுவனங்களை மிரட்டி பணம் வசூல் செய்தது பற்றி பொருளாளர் விளக்கம் கேட்ட நிலையில், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என எச்சரிக்கை விடுத்துள்ளார் பாஜக நிர்வாகி.
பழனி அருகே தொழில் நிறுவனங்களை மிரட்டி ஒரு கோடிக்கு மேல் வசூல் செய்ததாக முன்னாள் பாஜக நிர்வாகிக்கு விளக்கம் கேட்டு பாஜக மாவட்ட பொருளாளர் கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காழ்ப்புணர்ச்சியால் அனுப்பிய கடிதத்தை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்று பதில் கடிதம் அனுப்பியது சமூக வளைதலங்களில் பரவி வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவி செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன். பாரதிய ஜனதா கட்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்தார். கடந்த மாதம் காலை உணவுத் திட்ட பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதாகி சிறை சென்றதால் மகுடீஸ்வரன் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
மேலும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியதோடு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் மகுடீஸ்வரனை நீக்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மாவட்ட தலைவர் கனகராஜ் பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் பாஜக முன்னாள் மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் ரேக்ளா பந்தயம் நடத்துவதாகவும், மக்களவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் கூறி தொழில் நிறுவனங்களை மிரட்டியும், அச்சுறுத்தியும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட பாஜக பொருளாளர் ஆனந்த், மகுடீஸ்வரனுக்கு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளார். அந்தக் கடிதத்தில், பாஜக கட்சிப் பெயரை பயன்படுத்தி ரேக்ளா ரேஸ் நடத்தப் போவதாகவும், திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட போவதாகவும் கூறி புஷ்பத்தூர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் ஒரு கோடிக்கு மேல் பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது.
இந்த கடிதம் கிடைத்து ஏழு நாட்களில் திண்டுக்கல் மாவட்ட பாஜகவின் பெயரில் பாஜகவின் வங்கிக் கணக்கில் அந்த பணத்தை செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களை மாவட்ட பொருளாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தக் கடிதம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இந்நிலையில், அந்தக் கடிதத்திற்கு பதில் அளித்துள்ள முன்னாள் பாஜக நிர்வாகி மகுடீஸ்வரன், "எனக்கு வேண்டாத நபர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு பொய்யான சங்கதிகளை சொல்லி அறிவிப்பு அனுப்பி உள்ளீர்கள். நான் கட்சியில் சேரும் முன்பிருந்தே எனது மனைவி புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளார். கட்சியில் எனது சொந்த பணத்தை தான் செலவு செய்து வந்துள்ளேன்.


என் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாஜக மாவட்ட நிர்வாகிகள் கட்சியில் சேரும் முன்பு இருந்த சொத்தையும் தற்போது உள்ள சொத்தையும் மதிப்பிட்டு பார்த்தால் தெரியும்" என்று தனது விளக்க கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு அனுப்பிய கடிதத்தை பாஜக திண்டுக்கல் மாவட்ட பொருளாளர் ஆனந்த் திரும்ப பெறாவிட்டால் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்வேன் என்றும் மகுடீஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்ட பாஜகவினர் மாறி மாறி அனுப்பிய கடிதங்கள், தற்போது சமூக வலைதளங்களில் பரவி பாஜக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications