வெத்து பேப்பரில் கையெழுத்து.. கல்லா கட்டிய மாவட்ட செயலாளர்! கோஷ்டி பூசலால் திணறும் திண்டுக்கல் தவெக!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழக வெற்றிக்கழக வட்டாரத்தில் தற்போது ஒரு பரபரப்பான தகவல் உலா வருகிறது. திண்டுக்கல் தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களில் ஒருவர், வார்டு செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கி வருகிறாராம். அது மட்டும் அல்லாமல் ஆதார் கார்டு, நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களையும் பெற்று வருகிறார் என்கின்றனர்.

இதன் பின்னணி குறித்து விசாரித்த போது புதிதாக நிரப்பப்பட உள்ள பதவிகளுக்கு பணம் பெற்றுக் கொண்டு அவர்களை ஆதரிப்பதாக தலைமைக்கு அறிக்கையை அளிக்கத்தான் இந்த வெத்து பேப்பர் கையெழுத்து என்கின்றனர்.

Dindigul TVK Tamilaga Vettri Kazhagam

ஏற்கனவே திண்டுக்கல் தவெக பல கோஸ்ட்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில் தற்போது வெத்து பேப்பர் கையெழுத்து விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர் நண்பா - நண்பீஸ்.

ரசிகர் மன்றமாக இருந்து.. மக்கள் இயக்கமாக மாறி.. அரசியல் கட்சியாக உருவெடுத்து தற்போது ஆளும் கட்சியாகவே மாறி இருக்கிறது தமிழக வெற்றி கழகம். 20 - 30 ஆண்டுகளாக விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டதாக ஒருபுறம் புகார் இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்ட செயலாளராக இருந்த பலருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பிறகு எம்எல்ஏக்கள் பலரும் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி இல்லை என போர்க் கொடி தூக்கினர். இதை அடுத்து சமீபத்தில் தான் சில எம்எல்ஏக்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து கோஷ்டி பூசல் விவகாரம் பெரிதாக வெடித்திருக்கிறது.
இந்த நிலையில் இதே கோஷ்டி மோதல் விவகாரம் திண்டுக்கல்லிலும் பெரிய விவகாரமாக மாறி இருக்கிறது. திண்டுக்கல் தமிழக வெற்றிக் கழகத்தில் தற்போது நான்கு கோஷ்டிகள் செயல்பட்டு வருகிறது.

தற்போதைய சூழலில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக தர்மராஜ், தெற்கு மாவட்ட செயலாளராக நிர்மல் குமார், மேற்கு மாவட்ட செயலாளராக கார்த்திக் ராஜன், திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளராக வாசுதேவன் என்ற தேவா பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் நிலக்கோட்டையில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் வென்றது.

தனி தொகுதியான அதில் அய்யனார் என்பவர் வெற்றி பெற்றிருந்தார். தொடர்ந்து திண்டுக்கல்லில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் சாதி ரீதியில் ஓரம் கட்டப்படுவதாக புகார் கூறிய நிலையில் அவருக்கு தென்மேற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதற்கிடையே கோஷ்டி பூசலில் தமிழக வெற்றி கழகம் சிக்கி தவிப்பதாக குமுறுகின்றனர் அந்த கட்சியின் தொண்டர்கள். அதாவது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் நசீர் ராஜா என்பவர் போட்டியிட்டு தோற்ற நிலையில் அவர் ஒரு குரூப்பை ரெடி செய்து தலைமையை சந்திக்க சென்றார்.

மேலும் மாநகர் மாவட்டம் என்ற பெயரில் பல நிகழ்ச்சி நடத்திய நிலையில் அவ்வாறு ஒரு பதவியே இல்லை என தர்மா அறிக்கை விட்டார். இது ஒருபுறம் இருக்க தற்போது திண்டுக்கல் தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. மாவட்ட செயலாளராக இருக்கும் 'ஒரு முக்கிய புள்ளி' வார்டு, ஒன்றிய நிர்வாகிகளிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து கேட்டு வருகிறார் என்கின்றனர்.

மேலும் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் கேட்டு பெற்று வருகிறார். வார்டு செயலாளர்கள் பெரும்பாலானோர் கையெழுத்து போட்டு கொடுத்து விட்ட நிலையில் ஒன்றிய செயலாளர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதற்கு பின்னனி என்ன? என்பது குறித்து விசாரித்த போது தான் அதிர வைக்கும் தகவல்கள் கிடைத்தது. உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும் என தமிழக வெற்றி கழக தலைமை உத்தரவிட்டிருக்கிறது.

மாநகர், நகர், ஒன்றியம், மகளிர் அணி, வழக்கறிஞர் அணி என பல்வேறு பதவிகளுக்கு நியமனம் நடைபெற இருக்கும் நிலையில் குறிப்பிட்ட அந்த மாவட்ட செயலாளர் ஏற்கனவே பதவிக்கேற்றவாறு 5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரை கல்லாகட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்குத் தான் உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பு என சொல்லி வசூல் வேட்டை நடத்தி வருகிறாராம்.

மேலும் எந்த அடிப்படையில் அவர்களுக்கு பொறுப்பு வழங்கப்படும் என தலைமை கேள்வி எழுப்பினால் அதற்கு சான்றாக தற்போது நிர்வாகிகளிடம் வெத்து பேப்பரில் கையெழுத்து வாங்கியதை வைத்து பெயர்களை மட்டும் நிரப்பி பட்டியலை சமர்ப்பித்து விடலாம் என்பதுதான் அவரது திட்டமாம். இதனால் தமிழக வெற்றி கழகத்தில் கோஷ்டி மோதல் வெடித்திருக்கிறது என்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் நிலக்கோட்டை எம்எல்ஏ அய்யனார் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் வகையில் அவரது தலைமையில் ஒரு அணியும், தர்மா தலைமையில் ஒரு அணியும், வாசுதேவன் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தேர்தலில் தோற்ற நசீர் ராஜாவும் தனியாக ஒரு குரூப்பை சேர்த்து வைத்துக்கொண்டு லோக்கல் பாலிடிக்ஸ் செய்து வருகிறார் என்கின்றனர். தலைமைக்கு இது தொடர்பாக புகார்கள் சென்றாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்கின்றனர். அதே நேரத்தில் இந்த விவகாரம் பெரிதாகியிருக்கும் நிலையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக சொல்கின்றனர் நம்மிடம் பேசிய தமிழக வெற்றி கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+