கவுண்டர் சிஎம்.. சாதி பெயரால் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்.. பாய்ந்தது BNS வழக்கு! 5 ஆண்டு ஜெயில்?
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன் சாதி பெயரை சொல்லி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதி மத ரீதியாக வாக்கு கேட்பது தேர்தல் விதிகளை மீறிய செயல் என புகார் எழுந்த நிலையில், அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் மீது காவல்துறை வழக்கு பதிவு. வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். தற்போது திண்டுக்கல் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வாக்கு சேகரித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 10.04.2026 அன்று திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர்களுடன் காப்பிலியபட்டி பகுதியில் வாக்கு சேகரித்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
இந்நிலையில், ஒக்கலிக கவுண்டர் இன மக்கள் அதிகம் வசிக்கும் காப்பிலியப்பட்டியில் பிரச்சாரம் மேற்கொண்ட திண்டுக்கல் சீனிவாசன்," நீங்கள் எல்லாம் ஒக்கலிக கவுண்டர்கள்.. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாளர் கவுண்டர்.. எனவே கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சர் ஆக போகிறார்" என பேசினார்.
சாதி பெயர்
தேர்தல் ஆணைய விதிகளின்படி சாதி மத அடிப்படையில் வாக்கு சேகரிப்பது குற்றம் என்ற விதி இருக்கும் நிலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் சாதிப் பெயரைச் சொல்லி திண்டுக்கல் சீனிவாசன் வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
வழக்குப் பதிவு
இந்நிலையில், திண்டுக்கல் சட்டமன்ற அதிமுக வேட்பாளர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். கவுண்டர் சமுதாய வழக்கறிஞர் வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் FIR NO. 245/2026-ல் 196(1)OF BNS ( பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023 இன் பிரிவு 196(1), மதம், இனம், ஜாதி, மொழி அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது தீய உணர்வுகளை வார்த்தைகள், எழுத்துக்கள், அடையாளங்கள் அல்லது மின்னணு ஊடகங்கள் மூலம் பரப்புதல்) பிரிவுன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 ஆண்டு சிறை
இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் ஜாமீனில் வர முடியாது என்பதோடு, 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தேர்தல் ஆணைய அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் திண்டுக்கல் சீனிவாசன் மீது இருக்கும் நிலையில் தற்போது சாதி பெயரைச் சொல்லி அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications