பழனி கோயில் நில முறைகேடு.. அதிகாலையிலேயே ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
திண்டுக்கல்: பழனி கோயில் நில முறைகேடு புகார் தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் திண்டுக்கல் வீட்டில் இன்று அதிகாலையில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். கா8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை, உடுமலைப்பேட்டை என சாட்சியின் வீடுகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பழனி கோயில் நில முறைகேடு புகார்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக இரண்டு தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பழனி கோவில் செயல் அலுவலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பழனி மலை அடிவாரத்தில் உள்ள 1.40 ஏக்கர் நிலம் பத்திரப்பதிவு செய்தது செல்லாது என்று உத்தரவிட்டனர். அந்த நிலத்தை பத்திரப்பதிவு செய்யலாம் என்ற தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தனர். இந்த சொத்துப்பதிவு விவகாரத்தில், பழனி போலீசார் விசாரணை நடத்தி, சொத்தை விற்றவர் வாங்கியவர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்த பொறுப்பு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். இதற்கிடையே, இந்த வழக்கை சிபிசிஐடி வசம் தமிழக அரசு ஒப்படைத்தது.
அதிகாலையிலேயே சோதனை
சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கிய நிலையில் பழனி சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. ஜஸ்டின் மணிகண்டன் சார் பதிவாளர் பொறுப்பில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் திண்டுக்கல் மற்றும் பழனியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. 8-க்கும் மேற்பட்ட சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லையிலும் போலீசார் சோதனை
நிலம் பத்திரப்பதிவு செய்து கொடுத்த அறக்கட்டளையின் நிர்வாகிகள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியான நிலையில் அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்திலிருந்து பத்திரப்பதிவு செய்தவர்களிடம் செல்போனில் பேசிய நபர்கள் குறித்த தகவலின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடந்து வருகிறது.
சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் அதிகாலை 4 மணிக்கே சோதனை தொடங்கிய நிலையில், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் வீடுகளிலும் சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். சாட்சியின் வீடுகளிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி அருகே டிகேஎன் புதூர் பகுதியில் உள்ள சேதுபதி (நிலம் வாங்கியவர்) , சாட்சி கையெழுத்திட்ட லட்சுமணன் (திமுக பிரமுகர்) வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நெல்லை, உடுமலைப்பேட்டை என ஒரே நாளில் சோதனை பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















Click it and Unblock the Notifications