திருப்பதி லட்டில் பன்றிக் கொழுப்பு.. பக்தர்களை பதற வைத்த சர்ச்சை! ஏஆர் டெய்ரி ஆலையில் திடீர் சோதனை!
திண்டுக்கல் : திருப்பதி லட்டுவில் விலங்கின் கொழுப்புகள் கலந்திருப்பதாக வந்த புகாரைத் தொடர்ந்து, நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏஆர் டெய்ரி ஃபுட் (பி) லிட் நிறுவனம் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தி மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றிக் கொழுப்பு, மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ஆட்சி காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் உபயோகப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய அபச்சாரம் என கூறியிருந்தார்.
அவரது குற்றச்சாட்டை அடுத்து பல இந்து அமைப்புகள், திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும், தேவஸ்தான நிர்வாகத்திற்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் கொழுப்பு, எருமை கொழுப்பு, மீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை கலந்துள்ளதாக மத்திய அரசின் பகுப்பாய்வு அறிக்கையும் உறுதி செய்துள்ளது. மேலும் திருமலைக்கு நெய் சப்ளை செய்தது திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர் டெய்ரி என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருப்பதியில் லட்டு செய்வதற்கு நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்ததோடு, நெய்யையும் திருப்பி அனுப்பியுள்ளது திருப்பதி தேவஸ்தானம்.
ஆனால், எங்களது நெய்யின் தரத்தை உறுதி செய்ய எந்த ஆய்வுக்கு உட்பட தயார் எனவும், திருப்பதி தேவஸ்தானம் எழுப்பிய கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக பதில் அளித்து வருகிறோம்” என திருப்பதி லட்டு தயாரிக்க தரமற்ற நெய்யை வழங்கியதாக புகார் கூறப்பட்ட ஏஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்தது. மேலும், திருப்பதி தேவஸ்தானம் எங்களது நெய் பொருள்களை ஆய்வுக்கு உட்படுத்திய சான்று நாங்கள் அனுப்புவதற்கு முன்பு ஆய்வு செய்த சான்றும் தங்களிடம் உள்ளது என அவர்கள் கூறினர்.

இதற்கிடையே நேற்று தமிழ்நாடு அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவி செயற் பொறியாளர் அனிதா, உள்ளிட்ட அதிகாரிகள், மதுரை சாலையில் உள்ள நிறுவனத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நிறுவனத்தின் பின் பகுதியில் உள்ள டேங்கரில் கழிவு நீரை சேகரித்து ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை மத்திய உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் 2 மணி நேரத்திற்கு மேலாக ஏ ஆர் டெயரி ஃபுட் (பி) லிட் நிறுவனத்தின் பொருள்களை அதாவது பால், நெய், பன்னீர், வெண்ணை, தயிர், மோர், இனிப்பு போன்ற பொருள்களை ஆய்விற்காக எடுத்து வருகின்றார். இந்த ஆய்வு மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்படும் எனவும், ஆய்வு முடிவுகள் வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications