இன்னும் ஒரே ஒரு நாள் தான்.. டாப்ல போகப் போகுது திருச்சி! இனி பஞ்சப்பூர் தான் மையமே.. மக்கள் ஹேப்பி.!
திருச்சி: திருச்சி மாவட்ட மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்த பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் நாளை மறுநாள் திறப்பு விழா காண இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பேருந்து நிலையத்தை தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே அங்கு டைடல் பார்க், சோலார் மின் திட்டங்கள், பார்க்கிங் முனையம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது
சென்னைக்கு அடுத்து தமிழகத்தின் மிக முக்கிய நகரம் என்றால் அது திருச்சி தான். திருச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துதான் பல மத்திய அரசு நிறுவனங்கள் அங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக பெல், துப்பாக்கி தொழிற்சாலை ஆகியவை திருச்சியில் அமைந்திருக்கின்றன.
இருந்த போதும் பெரிய அளவிலான நிறுவனங்கள் அங்கு இல்லை. விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. ஆனாலும் திருச்சி தமிழகத்தில் மையத்தில் இருக்கிறது. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய புள்ளி திருச்சி தான்.

தென் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் திருச்சி வழியாகத் தான் சென்னை செல்ல வேண்டும். அதேபோல ரயில் பயணமாக இருந்தாலும் திருச்சி தான் மைய புள்ளியாக இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் நகருக்குள் இருக்கும் பேருந்து நிலையத்தை புறநகரில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் இடையே இருந்தது. காரணம் நகருக்குள் பேருந்துகள் வருவதாலும் பேருந்து நிலையம் மத்திய பகுதியில் அமைந்திருப்பதாலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் சத்திரம் பேருந்து நிலையமும் நகருக்குள்ளே அமைந்திருப்பதால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர் மக்கள். இதை அடுத்து நகருக்கு வெளியே பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு இணையாக பிரம்மாண்ட பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பேருந்து நிலையம் அமைக்க பணிகள் தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக இந்த பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கு அருகே தான் சரக்கு வாகன நிறுத்த முனையம், சோலார் மின் திட்டங்கள், டைடல் பார்க் ஆகியவை அமைய இருக்கிறது. பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில்ஏசி வசதி, சர்வீஸ் சென்டர், எஸ்கலேட்டர், லிஃப்ட், ஆம்னி பேருந்து நிறுத்தம், அரசு பேருந்து நிறுத்தம், உள்ளூர் பேருந்துகள் நிறுத்தம், பயணிகளுக்கான காத்திருப்பு அறைகள், ஓய்விடம், உணவகம், கழிவறை, 24 மணி நேர கண்காணிப்பு, உதவி மையங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், புல்வெளி, பூங்கா, நடைபாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் மே 9ஆம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் பேருந்து நிலையத்தில் இறுதி கட்டப் பணிகளை அமைச்சர் கேஎன் நேரு ஆய்வு மேற்கொண்டு இருக்கிறார். மேலும் ஓட்டுனர்களுக்கான வசதிகளை சிறப்பாக செய்து வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையில் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது பஞ்சப்பூர் பேருந்து நிலையம்.












Click it and Unblock the Notifications