தேனி மேகமலையில் அரசு நிலம்... திண்டுக்கல் பெண்ணுக்கு பெரிய ஏமாற்றம்.. 3 வருடம் ஜெயில்
திண்டுக்கல் : தேனி மாவட்டம் மேகமலை என்பது தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்கள் உள்ள வனப்பகுதியாகும். இங்கு அரசு புறம்போக்கு நிலங்கள் உள்ளன. ஆனால் இந்த புறம்போக்கு நிலங்கள் முற்றிலும் வனப்பகுதி நிலங்கள் ஆகும்.இங்கு பட்டா வாங்கவே முடியாது. இங்கு எஸ்டேட் நிலத்தை தவிர தனிப்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக கிடையாது. ஏன் தோட்டமாக கூட வாங்குவது எளிது கிடையாது. இந்நிலையில் மேகலையில் பட்டா நிலம் இருப்பதாக திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண்ணிடம் ஏமாற்றியுள்ளார் கண்ணன்.. அவருக்கு திண்டுக்கல் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை மிக அழகான, மிக அமைதியான தேயிலை தோட்டங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு ஆங்கிலேயர் காலத்தில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேயிலை தோட்டங்கள் அமைக்க பட்டா வழங்கப்பட்டது. அதன்பிறகும் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தனிநபர்கள்குடியிருப்புகள் கட்ட பட்டா வழங்கப்படவில்லை.. ஏனெனில் மேகமலை என்பது ஒரு மலைவாசல் தலம் கிடையாது. சுற்றுலா தலமாக இப்போது அறிவிக்கப்பட்டாலும், அங்கு சுற்றுலா தலங்களுக்கு உண்டான லாட்ஜ், சொகுசு விடுதிகள் எதுவும் கிடையாது. ஏன் குடியிருப்புகள் கூட தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளே உள்ளன. மற்றவர்கள் அங்கு அவ்வளவு எளிதாக குடியேறிவிட முடியாது. அரசுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளது என்றாலும், அங்கு நிலம் வனப்பகுதி நிலம் ஆகும். எனவே குடியிருப்புக்காக பட்டா எந்த காலத்திலும் கிடைக்காது. ஆனால் மேகமலையில் அரசு நிலத்தை விற்று மோசடி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதுபற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி மங்களம். இந்த தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் போடியை சேர்ந்த 50வயதாகும் கண்ணன் என்பவரின் பழக்கம் கிடைத்தது. அவர் தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தேனியை அடுத்த மேகமலை பகுதியில் பட்டா நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும் மங்களத்திடம் கூறியிருக்கிறார். இதை நம்பிய மங்களமும் அந்த இடத்தை வாங்க விருப்பம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறிய தொகையை கொடுத்து பட்டா நிலம் என்று கூறப்பட்ட நிலத்தை வாங்கினார். அதன் பிறகு அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக மங்களம் சென்ற போது தான் அது அரசுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மங்களம், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அரசு நிலத்தை ஏமாற்றி தனக்கு விற்றுவிட்டதாக கண்ணன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த 5 பேர் மீது புகார் அளித்தார்.
அதன் பேரில் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரராகவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் உள்பட 6 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது திண்டுக்கல் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர். வழக்கை மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் விசாரித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் மதிவாணன் ஆஜராகி வாதாடினார். பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை நேற்று நிறைவு பெற்றது. குற்றம் சாட்டப்பட்ட கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட் தினேஷ்குமார் தீர்ப்பளித்தார். மேலும் இந்த வழக்கில் கைதான மற்ற 5 பேர் மீதான குற்றச்சாட்டுகள் தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் அனைவரையும் விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications