திண்டுக்கல்: ஒரு எலுமிச்சை 30 ரூபாய்! வெயிலால் கருகிய விளைச்சல்.. ஓட்டல்களில் லெமன் சாதத்திற்கு தடை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில், இப்போது நிலவி வரும் கடுமையான கோடை வெயில் மற்றும் எதிர்பாராத விளைச்சல் குறைவு காரணமாக எலுமிச்சை பழத்தின் விலை விண்ணை தொட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சந்தையில் எலுமிச்சைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சில்லறை விற்பனையில் ஒரு எலுமிச்சை பழம் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவது பொதுமக்களையும் வியாபாரிகளையும் ஒருசேர அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பொதுவாக கோடை காலங்களில் குளிர்ச்சியான பானங்களுக்காக எலுமிச்சையின் தேவை அதிகரிப்பது இயல்புதான் என்றாலும், இந்த ஆண்டு ஏற்பட்டுள்ள விலை உயர்வு ஒரு கிலோ 300 ரூபாய் வரை சென்றிருப்பது மிகப்பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

Lemon Price

திண்டுக்கல் ஓட்டல்கள்

திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை சுமார் 2,900 ஹெக்டேர் பரப்பளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாகச் சிறுமலை, வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, பழநி, ஒட்டன்சத்திரம் மற்றும் தாண்டிக்குடி போன்ற பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் மிகத் தீவிரமாக நடைபெறுகிறது.

இந்தப் பகுதி விவசாயிகளுக்கு எலுமிச்சை ஒரு நிலையான வருவாயைத் தரும் முக்கியப் பயிராக இருந்து வருகிறது. சிறுமலை அடிவாரப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் அங்கிருந்து சேகரிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அண்டை மாநிலமான கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

எலுமிச்சம் சாதம் நிறுத்தி வைப்பு

கடந்த சில நாட்களாகவே திண்டுக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக உள்ளது. வெப்பநிலை சுமார் 45 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருவதால், அனல் காற்றின் காரணமாகப் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இத்தகைய கடும் வெப்பத்தால் குளிர்பானக் கடைகள் மற்றும் உணவகங்களில் எலுமிச்சை பழத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், வெப்பத்தின் தீவிரத்தால் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் பழங்களின் வரத்து கணிசமாகக் குறைந்துவிட்டது. தேவை அதிகமாகவும் வரத்து மிகக் குறைவாகவும் இருப்பதால், விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு பழம் 30 ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தக்காளி சாதம்

இந்தக் கடுமையான விலை உயர்வு நேரடியாக உணவகத் தொழிலைப் பாதித்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை 300 ரூபாய்க்கு விற்பனையாவதால், குறைந்த விலையில் உணவுகளை வழங்கும் ஓட்டல்களில் 'லெமன் சாதம்' தயாரிப்பது லாபகரமாக இல்லை. இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்களில் எலுமிச்சை சாதம் தயாரிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

அதற்கு மாற்றாகத் தக்காளி சாதம், தயிர் சாதம் உள்ளிட்ட மற்ற வெரைட்டி உணவுகளைத் தயாரித்து கஸ்டமர்களுக்கு வழங்கி வருகிறார்களாம்.. எலுமிச்சையின் விலை குறையும் வரை இந்த நிலை நீடிக்கும் என்றே உணவக உரிமையாளர்கள் கருதுகின்றனர்.

எலுமிச்சை விளைச்சல் குறைவு

இது குறித்து எலுமிச்சை வியாபாரிகள் சொல்லும்போது, கோடை காலத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் திருச்சி, சிவகங்கை, மதுரை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து வியாபாரிகள் தரம்மிக்க எலுமிச்சை பழங்களை விரும்பிப் கேட்கிறார்கள்..

ஆனால், உள்ளூரிலேயே விளைச்சல் குறைந்து வரத்து சரிந்துள்ளதால், கேட்பவர்களுக்குப் போதுமான அளவு பழங்களை வழங்க முடியாமல் திணறி வருவதாக தெரிவித்தனர். விளைச்சல் பாதிப்பும், தட்டுப்பாடும் இணைந்து எலுமிச்சையை எளிய மக்களின் எட்டாக்கனியாக மாற்றிவிட்டது என்பதுதான் தற்போதைய கள யதார்த்தமாக உள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+