ஹேப்பி திண்டுக்கல்..பஞ்சாயத்து ஓவர்! பஸ் ஸ்டாண்டு வர்றது உறுதி! ஜரூராக பணிகள்.. ஆபிசர்ஸ் சொல்வதென்ன?
திண்டுக்கல்: திண்டுக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது அங்கு அமைக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் சதி வேலை காரணமாக பேருந்து நிலையத்தை வரவிடாமல் தடுப்பதாக பொதுமக்களும் வணிகர்களும் குற்றம் சாட்டுகின்றனர். அதே நேரத்தில் முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டி விட்டார்.. பணிகளும் தொடங்கி விட்டது.. பேருந்து நிலையம் அமைவது உறுதி என்கின்றனர் மாநகராட்சி அதிகரிகள்.
திண்டுக்கல் நகராட்சி கடந்த 2016 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆன நிலையில் இன்றளவும் மாநகராட்சியின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. அதேபோல புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை .

இதனால் நாள்தோறும் திண்டுக்கல் நகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே கடந்த திமுக ஆட்சியின் போது திண்டுக்கல் பைபாஸ் சாலையில் 10 ஏக்கர் நிலம் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தப்பட்டது.
மேலும் இதன் கட்டுமான பணிகளுக்காக ரூபாய் 75 கோடி யை மாநகராட்சி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் துவக்கப்பட்ட நிலையில் தனி நபர்கள் சிலர் பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தடுப்பதற்கான முயற்சிகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது, பேருந்து நிலையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளப்பட்டி பகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாகும்.
இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைந்தால் எங்களது கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும். அதேபோல தென் மற்றும் வட மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சந்திப்பாக இந்த பகுதி உள்ளதால் திண்டுக்கல் நகர் பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறையும். தேசிய நெடுஞ்சாலையில் இந்த பகுதி அமைந்துள்ளதால் பெங்களூர், மதுரை, சென்னை, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் வட மாவட்டங்களுக்கும் எளிதில் செல்லும் இணைப்பு சாலையாக இந்த சாலை உள்ளது.
எனவே தமிழக அரசு புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வேண்டும் என்கின்றனர். மேலும் குடிநீர் பிரச்சனை வரும் என சொல்லும் நிலையில் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான குடிநீரை கடைகளில் வாங்கிக் கொள்வார்கள் அல்லது மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படும் நிலையில் அதைத்தான் பயன்படுத்துவார்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.
எனவே குடிநீர் பிரச்சினையால் பேருந்து நிலையம் வரக்கூடாது என்பது திட்டமிட்ட சதி என்கின்றனர். அது மட்டும் அல்லாமல் வேறு இடத்தில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பேருந்து நிலையம் வர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே அடிக்கல் நாட்டிய இடத்தில் அமையக்கூடாது என சரி செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தக சபை தலைவர் நசீர் சேட் கூறும்போது," திண்டுக்கல் பேருந்து நிலையம் நெரிசல் மிகுந்த பகுதியில் செயல்படுகிறது. அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வணிகர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு செயற்குழுக் கூட்டத்தில் பேருந்து நிலையத்தை விரைவில் அமைக்க வேண்டும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பேருந்து நிலையத்தை சுற்றி இருக்கும் சில ஓட்டல் உரிமையாளர்கள் பேருந்து நிலையம் வரக்கூடாது என சதி செய்கிறார்கள். ஒரு இடத்தில் பேருந்து நிலையம் வந்தாதான் அப்பகுதியில் வணிகம் பெருகும். மேலும் அப்பகுதி மக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கும். எனவே முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய இடத்திலேயே பேருந்து நிலைய பணிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரித்த போது," பேருந்து நிலைய அடிக்கல் நாட்டும் பணிகள் முடிவடைந்து தற்போது முதற்கட்ட பணிகள் தொடங்கிவிட்டது. அரசு சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது. மேலும் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றே தற்போது பணிகள் ஆனது நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. திட்டமிட்டபடி அங்கு பேருந்து நிலையம் தொடங்கும். அது மட்டுமல்லாமல் ஆத்தூர் வைகை கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் 24 மணி நேரமும் பொது மக்களுக்கு குடிநீர் வழங்க வசதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கழிவறை, இரண்டு பார்க்கிங் என்பது கடைகள், மூன்று உணவகங்கள் என பொதுமக்கள் வசதிக்கேற்ப பேருந்து நிலைய பணிகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் பெரிய நகரங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்து நிறுத்தமும் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வெளியூர் செல்லும் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணிக்க முடியும்.
நான்கு வழிச்சாலைக்கு அருகே பேருந்து நிலையம் அமைய இருப்பதால் திண்டுக்கல் மதுரை தேனி திருச்சி கரூர் என அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் தான் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாக கூறப்படுவது தவறு. உரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பிறகு பணிகள் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தின் எந்த பகுதியிலும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி பேருந்து நிலையம் இல்லை திண்டுக்கல்லில் மட்டும் தான் அப்படி ஒரு இடம் அமைந்திருக்கிறது. என்ன நடந்தாலும் அந்த இடத்தில் பேருந்து நிலையம் வருவது உறுதி" என்கின்றனர்.


Click it and Unblock the Notifications
