நீங்க திண்டுக்கல்? "சந்திரயான் -3" பெருமையில் நீங்களும் "அலப்பறை"யை கூட்டலாம்.. ஏன் தெரியுமா?
திண்டுக்கல்: சந்திரயான்-3 விண்கமல் நிலவின் தென் துருவம் அருகே வெற்றிகரமாக தரை இறங்கிய பெருமித தருணங்களின் தடங்கள் தொடருகின்றன. சந்திரயான்-3 விண்கலம் தொடர்பான பணிகளில் கட்டளைகளை பிறப்பிக்கும் டெலிகமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக பணிபுரிந்தது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி கெளரிமணி ராமராஜ்.
இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சரித்திரம்தான் சந்திரயான் 3 விண்கலம். நிலவின் தென் துருவப் பகுதியில் சந்திரயான்- 3 விண்கலத்தை தரை இறக்கி புதிய வரலாறு படைத்துவிட்டது நமது இந்தியா.

இந்திய விண்வெளி ஆய்வுத் துறையில் இதுவரையிலான 3 சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகளின் திட்ட இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீரமுத்துவேல். இந்த மூன்று தமிழ்நாட்டு தமிழர்களுமே தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தில் படித்து இந்த உயர்நிலையை எட்டியதுடன் இந்திய தேசத்தையும் பெருமைப்பட வைத்திருக்கின்றனர்.
இதனிடையே சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் விஞ்ஞானிகள் குழுவில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி கெளரிமணி ராமராஜும் இடம் பெற்றிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் கெளரிமணி. 50 வயதான இவர், மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். 23 ஆண்டுகளாக இஸ்ரோவில் செயற்கைக் கோள் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் மூன்றும் பெங்களூர் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவற்றுக்கான கட்டளைகளை பிறப்பிக்கக் கூடிய டெலிகமாண்ட் சாப்ட்வேட் வடிவமைப்பாளர்தான் பழனி விஞ்ஞானி கெளரிமணி ராமராஜ். இதனால் திண்டுக்கல் மாவட்டமும் விஞ்ஞானி கெளரிமணி ராமராஜால் பெருமிதமும் பெருமையும் கொள்கிறது. சந்திரயா 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானி கெளிரிமணி ராமராஜுக்கு திண்டுக்கல் மாவட்ட சிபிஎம் வாழ்த்து தெரிவித்துள்ளது. இது தொடர்பான வாழ்த்து செய்தியில், சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படுவதற்கான ஆர்பிட்டர் சந்திரனில் கால் பதிப்பதற்கான லேண்டர் ஆய்வு செய்யும் ரோவர் ஆகியவற்றை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இயக்குவதற்கான ஆணைகளை பிறப்பிக்கும் டெலிகமாண்ட் சாப்ட்வேர் வடிவமைப்பாளராக செயல்பட்ட விஞ்ஞானி கௌரி மணி ராமராஜ் திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியை சேர்ந்தவர். வாழ்த்துக்கள் கௌரி மணி உங்களால் திண்டுக்கல் மாவட்டம் பெருமை கொள்கிறது. சிபிஎம் திண்டுக்கல் மாவட்ட குழு உங்களை வாழ்த்துகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications