அப்போ அண்ணன் சீமான் கனவு அவ்வளவு தானா? பொது வேட்பாளரெல்லாம் இல்லையாம்! ’டாட்’ வைத்த அதிமுக புள்ளி!
திண்டுக்கல்: இடைத்தேர்தலில் பொது வேட்பாளர் இல்லை.. சட்டசபையில் திமுகவும், அதிமுகவும் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாக தகவல் வெளியான தகவல்முற்றிலும் உண்மையில்லாத பொய்யான வதந்தி எனவும், அதிமுகவும் திமுகவும் தனித்தனி கட்சிகள். இரண்டு கட்சிகளும் தங்களது சொந்த வளர்ச்சிக்காகவே செயல்படுவார்களே தவிர, இருவரும் இணைவது என்பது முற்றிலும் தவறான தகவல் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர்," கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. முதலமைச்சர் தரப்பில் பேசும் ஒரு அமைச்சர் மட்டுமே இதனை மறுக்கிறார். எப்படி இருந்தாலும் விரைவில் உண்மைகள் வெளிவந்தே தீரும்.
திண்டுக்கல் சீனிவாசன்
இது தொடர்பான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளோ அல்லது அழைப்புகளோ இருந்தால், அவையனைத்தையும் பரிசீலனை செய்து எதிர்க்கட்சிகள் விரைவில் உண்மையை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய குழப்பம் நிலவுகிறது.
கள்ளக்குறிச்சி விவகாரம்
ஒரு பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எம்.எல்.ஏ ஒருவர் குறுஞ்செய்தி அனுப்பியதும், போதையில் தடுமாறி அந்த அதிகாரியின் வீட்டுக்குச் சென்றதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எம்.எல்.ஏ-வின் இந்தச் செயலை கரூர் எம்.பி உள்ளிட்ட மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். ஆனால், மாணிக்கம் தாகூர் மட்டும் அந்த எம்.எல்.ஏ-வுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார்.
காங்கிரஸ்
ராகுல் காந்திக்கு ஆதரவு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அவர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகப் பேசுவதோடு, இது மிகச் சிறப்பான ஆட்சி என்றும் புகழ்ந்து வருகிறார். ஒரே விவகாரத்தில் எம்.பி.க்கள் ஒருபுறம் கண்டனம் தெரிவிப்பதும், மாணிக்கம் தாகூர் ஆதரவாகப் பேசுவதுமாக உள்ள காங்கிரஸ் கட்சியின் இந்த முரண்பாடான நிலைப்பாட்டைப் பார்த்து பொதுமக்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
சட்டசபையில் திமுகவும், அதிமுகவும் இணைந்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் உண்மையில்லாத பொய்யான வதந்தி. அதிமுகவும் திமுகவும் தனித்தனி கட்சிகள். இரண்டு கட்சிகளும் தங்களது சொந்த வளர்ச்சிக்காகவே செயல்படுவார்களே தவிர, இருவரும் இணைவது என்பது முற்றிலும் தவறான தகவல். இடைத் தேர்தல்களில் அதிமுக மீண்டும் கூட்டணியை கட்டமைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா? எனக் கேட்கிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி
தற்போதைய ஆளுங்கட்சிக்கு மொத்த வாக்குகளில் 35 சதவீத வாக்குகள் மட்டுமே உள்ளன. மீதமுள்ள 65 சதவீத வாக்குகளைக் கூட்டணியின் மூலம் ஒருங்கிணைத்து, ஆளுங்கட்சியை எப்படி வீழ்த்துவது என்பதற்கான வியூகத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வகுத்து வருகிறார். கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும்.
பொது வேட்பாளர்
இடைத்தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் யாரேனும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா என்றால், அப்படி பொது வேட்பாளர் நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை. இதனைத் தொடர்ந்து மறுத்து வருகிறோம். எங்கள் கட்சியில் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைப் பொதுச் செயலாளர் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார்.
சட்டம் ஒழுங்கு
தமிழ்நாட்டில் தற்போது சட்டம் ஒழுங்கு என்பதே கிடையாது. இரண்டு பெண் அமைச்சர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், எங்கு பார்த்தாலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு அடிப்படையான காரணமே மதுவும், இந்த போதைப்பொருட்களும் தான். இதனை ஆளுங்கட்சியால் கட்டுப்படுத்தவே முடியவில்லை; நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது." என்றார்.


Click it and Unblock the Notifications
