திண்டுக்கல் டூ திருச்சூர்.. புதிய காரில் பெற்றோருக்கே தெரியாமல் கேரளா ட்ரிப்.. உருக்கமான தகவல்
பொள்ளாச்சி: 8 மாணவர்களில் ஒரு மாணவன் புதிதாக கார் வாங்கி உள்ளார். அந்த கியா கார் கடந்த 30ம் தேதி தான் ரிஜிஸ்ட்ரேஷன் ஆகி உள்ளது. புதிய கார் வாங்கிய மாணவன், நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக போன கேரளா டிரப் தான் விபரீதமாகி உள்ளது.
திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம் அருகே உள்ள பணம்பிக்கின்னுவில் நேற்று நள்ளிரவு எட்டு மாணவர்கள் உயிரிழக்கக் காரணமான இந் விபத்து குறித்து, காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், காரில் மாணவர்கள் அதிவேகமாக வந்துள்ளனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை 66-ல் சரக்கு லாரி சட்டவிரோதமாக முதல் லேனிலேயே நிறுத்தப்பட்டிருந்தது இந்த இரண்டு தான் விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

11:40 மணியளவில் நடந்தது
தேசிய நெடுஞ்சாலை 66ல் நிறுத்தப்பட்டிருந்த மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட சரக்கு லாரியின் (MH 43 CE 3671) பின்புறத்தில், தமிழ்நாடு பதிவு எண் கொண்ட கியா கார் (TN 59 DW 8299) மோதியதில் இந்த விபத்து இரவு சுமார் 11:40 மணியளவில் நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் அந்தக் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
விபத்து எப்படி நடந்தது என டிஎஸ்பி விளக்கம்
தேசிய நெடுஞ்சாலை 66-ன் அந்தப் பகுதியில் இருந்த மூன்று வழித்தடங்களில் இரண்டு மூடப்பட்டு, போக்குவரத்து மீதமுள்ள ஒரு வழித்தடத்தின் வழியாகத் திருப்பி விடப்பட்டிருந்துள்ளது. அப்படி மூடப்பட்டிருந்த வழித்தடங்களில் ஒன்றில்தான் அந்த லாரி நிறுத்தப்பட்டிருந்துள்ளது. கார் அதிவேகத்தில் வந்துள்ளது. அப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லை மற்றும் லாரியில் பிரதிபலிப்பான்கள் இல்லை. இதனால் தொலைவிலிருந்தே லாரியை ஓட்டுநரால் அடையாளம் காண முடியவில்லை என கொடுங்கல்லூர் டி.எஸ்.பி ஆர். ரதீஷ் ' கூறினார்.
ஆர்டிஓ விளக்கம்
கொடுங்கல்லூர் இணை மண்டலப் போக்குவரத்து அலுவலர் கிஷோர் குமார் கூறுகையில், அந்த லாரி தேசிய நெடுஞ்சாலையின் தீவிர வலதுபுறத்தில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டு, திருப்பத்தைக் காட்டும் சாலைக் குறியீடுகளையும், மாற்றுப் பாதையையும் மறைக்கும் வகையில் நின்றுள்ளனர்.
லாரி நின்ற விதம் காரணமாகவே, கார் ஓட்டுநரால் அந்தத் திருப்பத்தை முன்கூட்டியே கவனிக்க முடியாமல் போயிருக்கலாம். முதற்கட்ட ஆய்வில் லாரி நிறுத்துவதற்கு அனுமதி இல்லாத ஆபத்தான இடத்திலேயே அது நிறுத்தப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் மோட்டார் வாகனத் துறை (MVD) குழுவினர் விபத்து நடந்த இடத்தில் விரிவான ஆய்வு நடத்துவார்கள் எனறார்
தீயணைப்பு வீரர்கள் சொன்ன தகவல்
இரிஞ்சாலக்குடா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் தகவல்படி, அவர்களுக்கு இரவு 11.48 மணியளவில் அழைப்பு வந்துள்ளது. மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, கார் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதி நொறுங்கிச் சிக்கியிருந்தது. அதற்குள்ளாகவே, அப்பகுதி மக்களும் வழிப்போக்கர்களும் காயமடைந்த 6 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள் என தீயணைப்பு அலுவலர் தெரிவித்தார்.
காரின் ஓட்டுநர் உட்பட இருவர் நொறுங்கிய காரின் இடிபாடுகளுக்குள் மீட்க முடியாதபடி சிக்கியிருந்தனர். தீயணைப்புப் படையினர் 'ஹைட்ராலிக் கட்டர்' கருவிகளைப் பயன்படுத்தி காரைப் பிளந்து அவர்களை வெளியே எடுத்தனர். இருப்பினும், காரில் இருந்த 8 பேருமே திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
உடல்கள் ஒப்படைப்பு
உயிரிழந்தவர்களின் விவரம்: விஸ்வா (20) - சேலம், சூர்யா (20), ஜோசுவா (20), யுவசஞ்சித் (20) - திண்டுக்கல் சந்தோஷ் (20), பிரசன்னா - மதுரை, ஜீவா மற்றும் முரளி கிருஷ்ணா. பிரேதப் பரிசோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக கைபமங்கலம் எம்எல்ஏ கே.கே. வல்சராஜ் தெரிவித்தார். ஆறு பேரின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; மீதமுள்ள இருவரின் குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறினார்.
லாரி டிரைவர் மீது வழக்கு
பாரதிய நியாய சன்ஹிதாவின் (BNS) பிரிவு 105-ன் கீழ் (கொலையாகக் கருதப்படாத, ஆனால் மரணத்தை விளைவிக்கும் வகையிலான செயல்), அந்த லாரி ஓட்டுநர் மீது திருச்சூர் கைபமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) முகமது நதீமுதீன் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட நிலையில், திருச்சூர் மாவட்ட ஆட்சியர் ஷிகா சுரேந்திரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஏற்பாடுகளைக் கண்காணித்தார்.
புத்தம் புதிய கார்
இந்த விபத்து குறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "8 மாணவர்களில் ஒரு மாணவன் புதிதாக கார் வாங்கி உள்ளார். அந்த கியா கார் கடந்த 30ம் தேதி தான் ரிஜிஸ்ட்ரேஷன் ஆகி உள்ளது. புதிய கார் வாங்கிய மாணவன், நண்பர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக போன கேரளா டிரிப் பிளான் பண்ணி போய் இப்படி ஆகியிருக்கிறது.
பெற்றோருக்கு எதுவுமே தெரியாது
இதில் என்ன கொடுமை என்றால்.. இந்த ட்ரி பற்றிய விவரம் குடும்பத்தினர் கிட்ட சொல்லல.. எனவே பெற்றோர் யாருக்குமே இவர்கள் டிரிப் போன விஷயம் எதுவுமே தெரியாது. இன்று அதிகாலை அவர்களுக்கு போன் வந்துள்ளது..உங்க பையனுக்கு ஆக்சிடண்ட் திருச்சூர் ஹாஸ்பிட்டலுக்கு வாங்க ன்னு சொல்லியிருக்காங்க. இறந்த செய்தியை திருச்சூர் போலீஸ் உடனே சொல்லவில்லை.. அவர்களுக்கு டிரிப் போனதும் தெரியவில்லை.. இறந்ததும் தெரியவில்லை.. மருத்துவமனை போன போது தான், அந்த செய்தி அவுங்களுக் பெரிய இடியாகி உள்ளது.
ஊடகவியலாளரால் ஜீரணிக்க முடியவில்லை
இதுபற்றி ஊடகவியலாளர் ஒருவர் ரிப்போர்டிங் செய்யும், "என்னால இங்க நின்னு ரிப்போர்ட் பண்ண முடில..எனக்கே ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு..அதுக்கும் நான் ரொம்ப தள்ளி தான் நிக்கிறேன்..என்னால அவுங்க அழுகையை சகிச்சுக்க முடியவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார். பசங்க 8 பெரும் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள்" என்று நெட்டிசன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
