பச்ச புள்ளைங்க கெட்டு போகுது.. சரக்கா விக்கிற! சாராய வியாபாரியை பந்தாடிய பெண்கள்.. பாட்டில் பறக்குதே
திண்டுக்கல்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நடைபெற்று வரும் நிலையில் மது கடைகள் இல்லாத பகுதிகளில் செல்லிங் எனப்படும் சட்டவிரோத மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சில்லிங் மதுபான விற்பனை நடைபெற்ற இடத்துக்கு சென்று மது பாட்டில்களை பெண்கள் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசு நேரடியாக மது விற்பனை செய்து வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் மற்றும் மதுக்கடைகளுடன் கூடிய மதுபான பார்கள் செயல்படுகிறது.

இது மட்டுமல்லாமல் தனியார் பார்கள், மனமகிழ் மன்றங்கள், கிளப்புகளில் மது விற்பனை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற தீர்ப்பு, மக்கள் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக பல இடங்களில் மது கடைகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதிகளில் சிலர் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கெல்லாம், டாஸ்மாக் மது கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். அதாவது டாஸ்மாக்கில் ஒரு குவாட்டர் 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது என்றால் சட்ட விரோதமாக விற்கப்படும் கடைகளில் 200 ரூபாய் முதல் 350 ரூபாய் வரை மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. இதனால் கூலித்தொழிலாளிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட மது போதைக்கு அடிமையாவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சில்லிங் மதுபான விற்பனை நடைபெற்ற இடத்துக்கு சென்று மது பாட்டில்களை பெண்கள் அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வத்தலகுண்டு அருகே கோம்பைபட்டி கிராம பகுதியில் அரசு மதுபானங்கள் சட்டவிரோத செல்லிங் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதனால் அப்பகுதியில் 24 மணி நேரமும் மதுபானங்கள் கிடைத்து வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மது அருந்தியவர்கள் அடிக்கடி ஊருக்குள் தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாகவும் இருந்து வந்துள்ளது. எனவே இந்தப் பகுதியில் மதுபானம் விற்கக் கூடாது என அப்பகுதி கிராமப் பெண்கள் பலமுறை வலியுறுத்தியும் சில்லிங் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் செல்லிங் விற்பனை நடைபெறும் இடத்திற்கு திரண்டு சென்று மது பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டும் இடத்தை முற்றுகையிட்டனர்.

இதனை கண்டதும் சில்லிங் மது விற்பனை செய்து கொண்டிருந்தவர்கள் பாட்டில்களை அங்கே போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனை அடுத்து ஆத்திரத்துடன் வந்த பெண்கள் கையில் கிடைத்த மது பாட்டில்களை எடுத்து தரையில் வீசி எரிந்து உடைக்க தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், மது பாட்டில்களின் பெண்கள் ஆவேசமாக உடைக்கும் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வத்தலகுண்டு காவல்துறையினர் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராமத்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications