இது ஒரு பொழப்பா? இரவும் பகலும் கட்சிக்கொடி கட்டினோம்! வயிற்றெரிச்சலா இருக்கு! திமுக நிர்வாகி குமுறல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் முருங்கை விவசாயிகளுக்காக அரசு கட்டிக் கொடுத்த பதப்படுத்தும் குடோனை தனியார் நூற்பாலை ஒன்றுக்கு அதிகாரிகள் வாடகை விட்டிருப்பதால் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி மாசி தனது உள்ளக்குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட இந்த பதப்படுத்தும் குடோன், இப்போது தனியார் நூற்பாலை நிறுவனம் ஒன்றுக்கு லீசுக்கு விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முருங்கை சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. இதையொட்டி முருங்கை விவசாயிகள் பயன்பெற வேண்டி, தமிழக அரசு சார்பில் முருங்கை இலை மற்றும் முருங்கைக்காயை பதப்படுத்தும் குடோன் வேடசந்தூரில் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலினும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திறந்து வைத்தார்.
இருப்பினும் அந்த பதப்படுத்தும் குடோன் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதையடுத்து வேடசந்தூர் பகுதி திமுக நிர்வாகி மாசி, நேரடியாக பதப்படுத்தும் குடோனுக்கு சென்று பார்த்த போது அங்கு லாரியிலிருந்து மூட்டை மூட்டையாக நூல்கள் இறக்கப்பட்டு குடோனில் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டிருந்தன. இதனைப் பார்த்து கொதித்துப் போன அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் போட்டு தனது கோபத்தை கொட்டினார்.

இந்தக் குடோன் திறப்பு விழாவுக்காக இரவும் பகலும் கட்சிக்கொடி கட்டி வேலை பார்த்தோம் என்றும் வேடசந்தூர் பகுதியை சேர்ந்த ஒரு நூறு பேருக்காவது இதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும், விவசாயிகள் பயன்பெறுவார்கள் என நம்பியதாகவும் கடைசியில் ரூ.2 கோடி கட்டிடத்தை தனியாருக்கு லீசுக்கு விட்டிருக்கிறார்கள் எனவும் குமுறியிருக்கிறார்.
அங்கே இருப்பவர்களுக்கு என்னத் தெரியும் மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டுக்கேட்பவர்களுக்கு தானே அதன் வலி தெரியும் என யாரை மனதில் வைத்து கூறினாரோ தெரியவில்லை இதெல்லாம் ஒரு பொழப்பா என திமுக நிர்வாகி மாசி குமுறியிருக்கிறார். மேலும், விவசாயிகளுக்காக அரசுக் கட்டிக்கொடுத்த பதப்படுத்தும் நிலையத்தை தனியார் நூற்பாலை அனுபவித்து வருவதை பார்க்கும் போது வயிற்றெரிச்சலாக இருக்கு என ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார்.












Click it and Unblock the Notifications