பழனி நில மோசடியில் மர்மங்கள்! 'நம்மைப் பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள்'னு தைரியம்! Dr.கிருஷ்ணசாமி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலம் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய 1.40 ஏக்கர் இடத்தை, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது:
பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்து நிலம் தனியாருக்கு விற்கப்பட்டதில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளன.
'நம்மைப் பாதுகாக்க ஆட்கள் இருக்கிறார்கள்' என்ற தைரியத்தில் தான் அரசு அதிகாரிகள் இத்தகைய அநியாயத்தைச் செய்திருக்க முடியும். தற்போது இவ்வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், எவ்வித முக்கியக் கைது நடவடிக்கையும் இல்லை.
சிபிசிஐடி விசாரணை உண்மையைக் கொண்டு வராது என்பதால், இந்த வழக்கினை உடனடியாகச் சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழகத்தில் தான் கோயில் நிலங்களை எளிதாக அபகரிக்கலாம் என்ற அவலநிலை உள்ளது. இந்த நில விவகாரத்தில் முறையான தீர்வு காணப்படவில்லை என்றால் இது தொடர்கதையாகிவிடும்.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அனைத்துச் சம்பவங்களுக்கும் பேச வேண்டியதில்லை, ஆனால் இத்தகைய முக்கியமான சம்பவங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். அரசு மௌனம் சாதிப்பது மிகப் பெரிய பிரச்சனையில் போய் முடியும்.
கல்வி முறையில் மாற்றம் வேண்டி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்தபோது, மத்திய அரசு அவருக்குச் செவி சாய்க்காமல் கைது செய்தது. அதன் பிறகு போராட்டம் வேறு திசைக்கு மாறியது. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு இரண்டு முறை நடந்ததை ஏற்க முடியாது.
குளறுபடியின்றி நேர்மையாக 'நீட்' தேர்வு நடக்க வேண்டுமென்றால், என்.டி.ஏ (NTA) அமைப்பைத் தவிர்த்துவிட்டு மத்திய சுகாதாரத்துறையே நேரடியாக நீட் தேர்வை நடத்த முன்வர வேண்டும்.
தமிழ்நாட்டிற்கான காவிரி நீரைப் பெறச் சட்டப்பூர்வ உரிமைகள் உள்ளன. இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை மாதங்களில் பெற வேண்டிய சுமார் 40 முதல் 45 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிடாததால் டெல்டாவில் ஒருபோகக் குறுவை சாகுபடியே முற்றிலும் அடிபட்டுப் போய்விட்டது.
முதலமைச்சர் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் விவசாயிகள் சங்கங்களைக் கூட்டி டெல்லி சென்று பாரதப் பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும். அல்லது உச்சநீதிமன்றத்தை அணுகி இடைக்கால மனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, குறுவை சாகுபடி பொய்த்த பிறகு, நேரடியாக கர்நாடக முதலமைச்சரைச் சென்று சந்திப்பது தவறான முன்னுதாரணம் ஆகும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத இந்தப் பிரச்சனையைச் சட்டரீதியாக உச்சநீதிமன்றம் மூலமே தமிழக அரசு அணுக வேண்டும்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
