ஆதார் கார்டு வாங்கிட்டீங்களா? ஆதார் மையத்தில் சாரை சாரையாய் குவியும் மக்கள்.. திகுதிகு திண்டுக்கல்
திண்டுக்கல்: ஆதார் மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் கிளம்பியிருக்கின்றன.
இந்தியாவிலுள்ள அனைவருக்குமே ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாகிவிட்டது. ஆதார் இல்லாமல் எந்த ஒரு செயலையுமே செய்ய முடியாது.. ஆதார் நம்பர் இருந்தால்தான், கேஸ் சிலிண்டர் மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்டங்களையும், சேவைகளையும் பெற முடியும்..

அடையாளம்: அதாவது, 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசுத் திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடிப்படையிலான அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனவேதான், 10 வருடங்களுக்கு முன்பு ஆதார் அட்டை வழங்கப்பட்ட நிலையில், இது வரையில் புதுப்பிக்காத ஆதார் எண் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பிக்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.. ஆதாரில் உள்ள ஆவணங்களை புதுப்பித்து வைத்திருப்பது, சீராக வாழ்வதற்கும், சிறந்த சேவைகள் மற்றும் துல்லியமான அங்கீகாரத்தை பெறுவதற்கும் மிகவும் உதவுகிறது.
வெப்சைட்: மைஆதார் என்ற வெப்சைட் மூலமோ அல்லது ஆன்லைனிலோ ஆதார் கார்டினை புதுப்பித்து கொள்ளலாம்.
myAadhaar போர்ட்டலில் ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 14, 2024 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அல்லது உங்கள் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று தேவையான ஆவணங்கள் அதாவது, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்றிதழ்களை பதிவேற்றுவதன் மூலம் பொதுமக்கள் தங்கள் ஆதார்களை புதுப்பித்து கொள்ளலாம். அந்தவகையில், பொதுமக்களும் ஆதார் மையங்களில் ஆதார் அட்டையை தந்து புதுப்பித்து வருகின்றனர். எனினும் ஒருசில இடங்களில் ஆதார் மையங்களில் கூட்டம் அதிகரித்துவிடுவதால், ஆதார் மையங்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
உதவித்தொகை: அதேபோல, பள்ளி மாணவ, மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, தபால் அலுவலக சேமிப்பு கணக்கு துவங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, இதற்காக மாவட்ட நிர்வாகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள்தோறும், கைரேகை பதிவு, போட்டோ மாற்றுதல், பெற்றோர் பான்கார்டு இணைப்பு போன்றவற்றிக்கு சிறப்பு முகாம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனவே, மாணவ, மாணவியர்கள் ஆதார் அட்டையில் கைரேகை பதிவு அவசியம் என்று கூறப்பட்டுள்ளதால், பல்வேறு மையங்களில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வகுப்புகளை புறக்கணித்து, ஆதார் மையங்கள் முன்பாக பல மாணவ, மாணவியர்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று கைரேகை பதிவு செய்யும் நிலைமை உள்ளதால், அவர்கள் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள.
நாமக்கல்: நேற்றுகூட, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி அருகிலுள்ள ஆதார் பதிவு பதிவு மையம், தபால் அலுவலகத்தில் செயல்படும் ஆதார் பதிவு மையம் உள்ளிட்ட தனியார்கள் நடத்திவரும் ஆதார் மையங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளானார்கள்.. எனவே, மாவட்ட நிர்வாகம் பள்ளிகள்தோறும் கூடுதல் பணியாளர்களை நியமித்து, சிறப்பு முகாம் நடத்தி கைரேகை பதிவு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுபோலவே, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்திலும், பொதுமக்களின் கூட்டம் அலைமோதிவிட்டது.. தாசில்தார் அலுவலகத்தில் பல மாதங்களாக செயல்படவில்லை.. அதேபோல போஸ்ட் ஆபீசிலும் ஒரு வாரத்திற்கு மேலாக ஆதார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாம்..
ஒட்டன்சத்திரம்: எனவே, ஒட்டன்சத்திரத்தில் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள ஆதார் மையம் மட்டுமே செயல்பட்டு வருவதால் அதிகாலையிலேயே நெரிசல் காணப்படுகிறதாம். அதுமட்டுமல்ல, ஒரே பணியாளர் மட்டுமே இருப்பதால், குறைந்த அளவு டோக்கன்களே விநியோகம் செய்யப்படுகிறதாம்.. இதனால், அதிகாலை 4:00 மணிக்கு வந்து காத்திருந்தாலும் அனைவருக்கும் டோக்கன் கிடைப்பதில்லை என்கிறார்கள்..
எனவே பொதுமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஒட்டன்சத்திரம் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்ட மையத்தை மறுபடியும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும், நகராட்சி அலுவகத்தில் உள்ள ஆதார் மையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications