தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி! ஜனநாயகன் தயாரிப்பாளரை விஜய் தேர்வு செய்ததன் பின்னணி என்ன?
சென்னை: தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக, ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே.நாராயண ரெட்டியை விஜய் நியமித்ததற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் அதற்கான பின்னணி என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
அரசியல் கணக்குகளைத் தாண்டி, மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே ஒரு பாலமாக செயல்படும் இந்த 'டெல்லி சிறப்புப் பிரதிநிதி' பதவி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? இதன் பின்னணி என்ன? என்பதை பார்க்கலாம்.

அதற்கு முன்பு இந்த பதவியின் பணிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநில அரசுக்கும், டெல்லியில் உள்ள மத்திய அரசுக்கும் இடையே தினசரித் தொடர்புகளை சுமூகமாக எடுத்துச் செல்லும் மிக முக்கியமான 'அரசியல்-நிர்வாகப் பாலம்' தான் இந்த டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி.
மாநிலக் கோரிக்கைகளை முன்னெடுத்தல்: தமிழகத்தின் மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினைகள் (உதாரணமாக: நீட் தேர்வு விலக்கு, காவிரி நீர் விவகாரம், மீனவர் நலன்) குறித்து மத்திய அமைச்சர்களிடமும், பிரதமரிடமும் மாநில அரசின் சார்பில் நேரடியாக அழுத்தம் கொடுப்பது இவர்களின் முதன்மைப் பணியாகும்.
நிதி மற்றும் திட்டங்களைப் பெறுதல்: மாநிலத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, மத்திய அரசின் மானியங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைந்து ஒப்புதல் பெறச் செய்து, அதற்கான நிதியைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவதில் இவருக்கு முக்கியப் பங்குண்டு.
அதிகாரப்பூர்வ அந்தஸ்து: இந்தப் பதவியில் அமர்த்தப்படுபவருக்குப் பொதுவாக 'கேபினெட் அமைச்சர்' (Cabinet Minister) அந்தஸ்து வழங்கப்படும். இதனால், டெல்லியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்கி, மத்திய அமைச்சகங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் இந்த பிரதிநிதிக்குக் கிடைக்கும்.
இப்படிப்பட்ட முக்கிய பதவியை ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயண ரெட்டிக்கு வழங்குவதாக தமிழக தலைமைச் செயலாளர் சாய்குமார் அரசாணையை நேற்று வெளியிட்டிருந்தார்.
இந்த பதவியில் அவர் ஓராண்டு இருப்பார் என்றும் சொல்லப்பட்டது. கர்நாடகாவை சேர்ந்தவர் வெங்கட் நாராயாண ரெட்டி. பெங்களூரில் கே.வி.என். புரொடெக்ஷன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
விஜய்யின் கடைசி படத்தை தயாரித்தவர் இவர்தான். இந்த படம் இன்னும் வெளியாகாததால் இவர் வைரலானார். தவெக ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ஆளுநர் மாளிகைக்கு விஜய்யுடன் சென்றார்.
அப்போதே அவர் முதல்வர் விஜய்யின் நம்பிக்கைக்குரியவராகியுள்ளார் என கருதப்படுகிறது. இவர் கர்நாடகாவில் தொழில் செய்து கொண்டிருந்தாலும் டெல்லி அரசியல் வட்டாரங்களிலும் மத்திய அமைச்சகங்களிலும் உள்ள முக்கிய புள்ளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்.
இதனால் டெல்லியில் தமிழக அரசின் உரிமைகளை நிலைநாட்டவும், மத்திய அரசுடனான இணக்கமான உறவை வளர்க்கவும் வெங்கட நாராயணாவின் இந்த டெல்லி தொடர்பு விஜய்க்குப் பெரிதும் உதவும் என நம்பப்படுகிறது.
தமிழக அரசின் பிரதிநிதியாக கர்நாடகாவை சேர்ந்தவரை நியமித்தது ஏன் என எதிர்ப்பு கிளம்பியது. ஏன் அந்த பதவிக்கு தமிழகத்தில் ஆளே இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதிலும் தற்போது தமிழக அரசுக்கு பெரிய பிரச்சினை மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பது.
இந்த மேகதாது அணை விவகாரத்தில் வெங்கட் நாராயண ரெட்டியின் நிலைப்பாடு என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.












Click it and Unblock the Notifications