ஐபிஎஸ் VS ஐபிஎஸ்.. பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டி? பாஜகவின் கையில் பெரிய பிளான்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் முருகனின் 3ம் படை வீடு அமைந்துள்ளது. இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் பழனியில் பாஜக சார்பில் அண்ணாமலையை களமிறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில் பழனி தொகுதியில் ஐபிஎஸ் VS ஐபிஎஸ் இடையே நேரடி போட்டி இருக்கும். மேலும் பழனி தொகுதியை பாஜக குறிவைப்பது ஏன்? அதன் பின்னணி குறித்த முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.
தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை முதலில் சட்டசபை தொகுதியில் போட்டியிடவில்லை என்று கூறினார். ஆனால் பாஜக மேலிடமோ அவரை களமிறக்க ஆர்வமாக உள்ளது. அண்ணாமலையின் செயல்பாடு தமிழக பாஜக வளர்ச்சிக்கு துணையாக உள்ளது.

இதனால் அவரை தேர்தலில் களமிறக்க பாஜக நினைக்கிறது. இதற்கிடையே தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், '' மேலிடம் சொன்னால் போட்டியிடுவேன்'' என கூறினார். இது அண்ணாமலையின் மனமாற்றத்தை காட்டுவதோடு மேலிடம் சொன்னால் நிச்சம் போட்டியிடுவேன் என்பதையும் எடுத்து காட்டுகிறது.
கோவையை விட்டு கொடுக்க தயங்கும் பாஜக
கடந்த 2024 ல் லோக்சபா தேர்தலில் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிட்டு 4.50 லட்சம் ஓட்டுகளை பெற்றார். இதனால் கோவையில் கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், சூலூர், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அண்ணாமலை களமிறங்கலாம் என்று கூறப்பட்டு வருகிறது. ஆனால் கோவையில் 10 தொகுதிகளி்ல 9 ல் அதிமுகவினரும், கோவை தெற்கில் பாஜகவின் வானதியும் எம்எல்ஏவாக உள்ளார். இதனால் அதிமுக கோவை மாவட்ட தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க தயங்குவதாக கூறப்படுகிறது.
பழனியில் அண்ணாமலை?
இந்நிலையில் தான் அதிமுக கூட்டணியில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபை தொகுதியை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் முக்கிய கோவில்கள் இருக்கும் சட்டசபை தொகுதிகளில் பாஜக போட்டியிட முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் பழனி தொகுதியில் பாஜக உரிமை கோரி உள்ளது. இந்த தொகுதியை அதிமுக, பாஜகவுக்கு வழங்கும்பட்சத்தில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பின்னணி என்ன?
அதாவது அண்ணாமலை கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்தவர். பழனி சட்டசபை தொகுதியில் கவுண்டர் (கொங்கு வேளாளர்), தேவர் (முக்குலத்தோர்), பட்டியல் சமூகத்தினர், நாயக்கர், நாடார், சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உள்ளனர். இதனால் அண்ணாமலையை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அண்ணாமலை கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கரூர் மாவட்டமும், திண்டுக்கல் மாவட்டமும் அண்டை மாவட்டங்களாக உள்ளன. மேலும் பழனி என்பது தென்மாவட்டங்களுக்கும், கொங்கு மாவட்டங்களுக்கும் எல்லையாக உள்ளது. இதனால் அங்கு அண்ணாமலையை களமிறக்கினால் அது கொங்கு மண்டலம் மற்றும் தென்மாவட்டங்களில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு வலுவை சேர்க்கும் என்று பாஜக நம்புகிறது.
அதிமுக விட்டு கொடுக்குமா?
அதுமட்டுமின்றி சமீபத்திய திருப்பரங்குன்றம் (முருகனின் முதல் படை வீடு) தீபத்தூண் விவகாரம் உள்ளிட்டவற்றால் இந்துக்களின் வாக்குகள் எளிதாக கிடைக்கும் என்று பாஜக நினைக்கிறது. இதனால் மூன்றாம் படை வீடான பழனியில் அண்ணாமலையை களமிறக்குவது சரியான சாய்ஸாக இருக்கும் என பாஜக மேலிடம் நினைக்கிறது. இந்த தொகுதியில் அதிமுக 3 முறை வென்றிருந்தாலும் கூட 2016, 2021 சட்டசபை தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுள்ளது. இதனால் அதிமுகவும், பழனியை பாஜகவுக்கு விட்டு கொடுக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
ஐபிஎஸ் VS ஐபிஎஸ்
ஒருவேளை அதிமுக, பழனி தொகுதியை பாஜகவிற்கு வழங்கும் பட்சத்தில் அண்ணாமலை களமிறங்கினால் அங்கு ஐபிஎஸ் VS ஐபிஎஸ் இடையே போட்டி இருக்கும். ஏனென்றால் பழனி சட்டசபை தொகுதியில் சிட்டிங் எம்எல்ஏவாக திமுகவின் ஐபி செந்தில் குமார் உள்ளார். இவரது இனிஷியல் மற்றும் பெயரின் முதல் எழுத்தை சேர்த்து பலரும் ஐபிஎஸ் என்பார்கள். அண்ணாமலையை எடுத்து கொண்டால் கர்நாடகாவில் ஐபிஎஸ்ஸாக பணியாற்றியவர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
ஐபி செந்தில் குமாரின் கோட்டை
மேலும் பழனி சிட்டிங் எம்எல்ஏவாக இருக்கும் ஐபி செந்தில் குமார், தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகன் ஆவார். இவர் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர். தேவர் சமுதாயத்தினரிடம் அதிமுக செல்வாக்காக உள்ளதோடு, அண்ணாமலைக்கு ஆதரவு உள்ளது. இதுவும் அண்ணாமலையை அங்கு பாஜக களமிறக்க இன்னொரு காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுகவின் ஐபி செந்தில் குமார் 1,08,566 ஓட்டுகள் பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் ரவி மனோகரன் 78,510 ஓட்டுகள் பெற்றார். இதனால் ஐபி செந்தில் குமார் 30,056 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல் 2016 சட்டசபை தொகுதியிலும் ஐபி செந்தில் குமார் 1,00,045 ஓட்டுகள் பெற்று 25,586 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய அதிமுக வேட்பாளர் குமாரசாமி 74,459 பெற்றார்.
2011 சட்டசபை தேர்தலில் ஐபி செந்தில் குமார் 80,297 ஓட்டுகள் வாங்கி தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கேஎஸ்என் வேணுகோபால் 82,051 வாக்குகள் பெற்று வென்றார். அதன்பிறகு 2 தேர்தல்களில் அதிமுக வெற்றி பெறவில்லை. தற்போது இந்த தொகுதி திமுக எம்எல்ஏ ஐபி செந்தில் குமாரின் கோட்டையாக உள்ளது. உண்மையில் அண்ணாமலை இந்த தொகுதியில் களமிறங்கினால் அது பலமான போட்டியாக இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications