மதிய உணவில் மாட்டுக்கறி? பிள்ளைகள படிக்க வைக்கிற வேலைய மட்டும் பாருங்க! மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
திண்டுக்கல்: மாணவர்களுக்கு மதிய உணவில் சிக்கன், மட்டன், பீப் என்று எதை வழங்குவதை விடுத்து உலகத்தரம் வாய்ந்த கல்வியை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும், திட்டமிட்டே இந்துக்களின் வழிபாட்டு முறைகளிலும், நம்பிக்கைகளிலும் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது என மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் கூறியுள்ளார். அரசின் சமூக நீதி விடுதிகளில் மாட்டுக்கறியை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னியரசு கூறியிருந்த நிலையில், ஜீயர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மன்னார்குடி ஸ்ரீ ஸ்ரீ ஶ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ராமானுஜ ஜீயர் திண்டுக்கல் மலை அடிவாரம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," தற்போது, நாங்கள் திண்டுக்கல்லில் உள்ள ஸ்ரீநிவாசபெருமாள்கோவிலின் முன்பாக இருக்கிறோம்.

கும்ப அபிஷேக சம்ப்ரோக்ஷன் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. சம்ப்ரோக்ஷன் கூட செய்யப்படவில்லை. இப்போது, கோவிலின் கும்ப அபிஷேகத்தை விரைவில் நடத்துமாறு கடவுளிடமும் அரசாங்கத்திடமும் பிரார்த்தனை செய்வோம்.
மன்னார்குடி ஜீயர்
தமிழகத்தில் நடக்கும் சில நிகழ்வுகள் ஒட்டுமொத்த இந்துக்களின் மனதையும் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. இது எந்த ஒரு கட்சிக்கும் எதிரான குரல் அல்ல; நமது உரிமைகளுக்காகவும், நமது தர்மத்தைக் காப்பதற்காகவும் எழுப்பப்படும் நியாயமான எச்சரிக்கை. சமீபத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவில் மாட்டு இறைச்சி வழங்குவது குறித்து ஒரு அமைச்சர் பேசி இருக்கிறார். படிக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதில்தான் அரசாங்கத்தின் கவனம் இருக்க வேண்டுமா? அல்லது இது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களில் இருக்க வேண்டுமா?
மாட்டுக்கறி
மாணவர்களுக்கு சிக்கன், மட்டன், பீப் என்று எதை வழங்குவதை விடுத்து, உலகத்தரம் வாய்ந்த தரமான கல்வியையும், ஒழுக்கத்தையுமே இந்த அரசு வழங்க வேண்டும். இதை மீறி இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் செயல்களில் எந்த அமைச்சரும் ஈடுபட்டால், அதற்குரிய தகுந்த ஜனநாயகப் பதிலை இந்துக்கள் தருவார்கள். மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நாம் தொலைக்காட்சியிலும் நேரில் பார்த்தோம். ஆனால், இதில்கூட பல இடங்களில் உண்மையான இந்து பக்தர்களை வெளியே நிறுத்திவிட்டு, மற்ற மதத்தினரை முன்னிலைப்படுத்துவது போன்ற செயல்கள் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன.
இந்து கோயில்கள்
இந்து கோயில்களின் சம்ப்ரோக்ஷணம் மற்றும் கும்பாபிஷேக விழாக்களில் இந்துக்களுக்கு மட்டுமே முழு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.கோயில்களின் ஆகம விதிகளும், பாரம்பரியமும் காக்கப்பட வேண்டுமே தவிர, அங்கு அந்நிய தர்மங்களுக்கு இடமளிக்கக் கூடாது. இந்து கோயில்களை இந்துக்கள்தான் நிர்வகிக்க வேண்டும் என்பதில் எந்தவித சமரசமும் இருக்க முடியாது.
இந்து விரோதப் போக்கு
இன்று திட்டமிட்டே இந்துக்களின் வழிபாட்டு முறைகளிலும், நம்பிக்கைகளிலும் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அரசாங்கமாக இருந்தாலும் சரி, தனி நபர்களாக இருந்தாலும் சரி இந்து விரோதப் போக்கை இனியும் நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இந்து கோவில்கள் இந்துக்களுக்கே! ஆன்மீக உரிமைகளில் தாராளம் காட்ட முடியாது இந்தக் குரல் தமிழகத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒலிக்க வேண்டும். நம்முடைய தர்மத்தைக் காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரள்வோம்" என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
