கொடைக்கானலில் பல வீடுகளுக்கு கடந்த மாதத்தை விட அதிக மின் கட்டணம்.. ரீடிங் எடுக்கவில்லையென புகார்
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான வீடுகளுக்கு கடந்த மாதத்தை விட அதிக மின் கட்டணம் - மின் அளவீடு பார்க்காமல் பழைய கட்டணமே வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொடைக்கானலை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், அதிமுக ஆட்சியின் போது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்று கூறியிருந்தார். எல்லாருக்கும் அது நடைமுறையில் இருந்தது. அடுத்து வந்த திமுக ஆட்சியிலும் அது தொடர்ந்தது.
இப்போது வந்த தவெக ஆட்சியில் வந்து, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். ஆனால் 200 யூனிட் மின்சாரம் கிடைத்ததா என்று கேட்டால், சந்தேகம் தான்.எனக்கு மே மாதம் 614 ரூபாய் தான் வந்தது. ஆனால் ஜூலையில் 617 ரூபாய் கட்டியிருக்கிறேன். 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால், அந்த 617 ரூபாய் எனக்கு வந்திருக்கக்கூடாது. முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்த 200 யூனிட் மின்சாரம், மக்களுக்கு நேரடியாக போய் சேருகிறதா , சேரவில்லையா என்று தெரியவில்லை..

அதேபோல் மின்சாரம் ரீடிங் எடுக்கவும் ஆட்கள் வருவது இல்லை.. பணியாளர்கள் ரீடிங் எடுக்க வருவது இல்லை.. போன மாதம் வந்த பில்லையே மறுபடியும் கம்ப்யூட்டரில் ஜெனரேட் செய்திருக்கிறார்கள். இவை எல்லாம் மக்களின் தலையில் சுமையாகவே போய் அழுத்துகிறது. ஏற்கனவே கஷ்டத்தில் உள்ள மக்களுக்கு இது பெரிய சுமையாக இருக்கிறது. மின்சார வாரிய அதிகாரிகள் சரியாக போய் ரீடிங் எடுத்து ,200 யூனிட இலவச மின்சாரத்தை மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவாகரத்தில் அரசுக்கும் கோரிக்கை வைக்கிறேன்" இவ்வாறு கூறினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மட்டுமல்ல, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தஞ்சை, திருச்சி உள்பட பல்வறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்களில் பலரும், இந்த மாதம் மின் கட்டணம் சரியாக வரவில்லை.. போன மாதத்தின் பில்லையே அனுப்பி உள்ளதாக குற்றம்சாட்டுகிறார்கள். மின்சார ரீடிங் முறையாக எடுத்திருந்தால் தங்களுக்கு மின் கட்டணம் கண்டிப்பாக குறைந்திருக்கும் என்றும், ஆனால் அப்படி ரீடிங் எடுக்கவில்லை என்றும் வேதனை தெரிவிக்கிறார்கள்.
ஆனால் இது பொதுவான குற்றச்சாட்டாகவே பார்க்கப்படுகிறது. ஏதாவது ஒரு சில வீடுகளில் தான் ரீடிங் எடுக்கப்படாமல் விடுபட்டிருக்கலாம் என்றும், பெரும்பாலான வீடுகளில் ரீடிங் எடுக்கப்பட்டு இருக்கும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள். எனினும் ஏராளமான மக்கள் இந்த முறை மின் கட்டணம் வழக்கமான முறையிலும், அதிகமாகவும் வந்துள்ளது என்றே கூறுகிறார்கள். 200 யூனிட் மின்சாரம் அரசு இலவசம் என்று அறிவித்துள்ளது.இந்த மின்சாரக் கட்டணகுறைப்பு மக்களுக்கு உண்மையில் போய் சேர வேண்டும் என்றால், முறையாகவும் ,சரியான நாட்களிலும் ரீடிங் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
