பழனி நில மோசடி வழக்கில் ஒருவர் மரணமடைந்த நிலையில்.. மற்றொருவர் மருத்துவமனையில்! ஜெயபிரகாஷ் எங்கே?
திண்டுக்கல்: பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கில் சார்பாதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது செய்யப்பட்ட நிலையில், ரத்த சர்க்கரை உயர்வு மற்றும் ரத்தம் அழுத்தம் காரணமாக மருத்துவமனையிலேயே ரிமாண்ட் செய்யப்பட்டு, நீதிமன்றத்திலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், ஏற்கனவே வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அன்வர்தீன் திடீர் மரணம் அடைந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையே சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்த ஜெயப்பிரகாஷ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.
பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின் ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
பின் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் பழனி கோவிலில் இருந்து ஆவணங்களைப் பெற்று விசாரணையை தொடங்கினார்.
பழனி நில மோசடி
நிலத்தை முறைகேடாக பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ், நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் சேர்ந்த வெள்ளத்துரை, பழனி புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்ருதீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி அன்வருதீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து இருந்தனர்.
ஜஸ்டின் மணிகண்டன்
இந்த வழக்கில் முக்கிய நபரான சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனின் முன்ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இதை அடுத்து தலைமறைவான ஜஸ்டின் மணிகண்டனை நேற்று கொடைக்கானலில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நேற்று இரவு அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் ஏற்பாடுகளை சிபிசிஐடி போலீசார் செய்து வந்தனர். அப்போது திடீரென ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவு
ஜஸ்டின் மணிகண்டனுக்கு மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததால் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கரை அளவு அதிகரித்தாலும், ரத்த அழுத்தம் அதிகரித்ததாலும், மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற காவல்
இந்நிலையில் திண்டுக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒன்று நீதிபதி பாக்கியராஜ் மருத்துவமனைக்கு நேரில் வந்து ஜஸ்டின் மணிகண்டன் சிகிச்சை பெற்று வருவதை நேரில் பார்வையிட்டார். பின்னர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு வருகின்ற 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். ஜஸ்டின் மணிகண்டன் உடல்நிலை சரியாகும் வரை நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயபிரகாஷ்
இதைத்தொடர்ந்து இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தலைமறைவு ஆகிருந்த நிலையில்,
ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் நேற்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வந்தனர். அதே நிலையில் அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 நபர்களிடம் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய ஜெயப்பிரகாஷ் திண்டுக்கல் சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நேரடியாக வந்து அவர்களிடம் சரணடைந்தார்.
அன்வர்தீன்
அவரிடம் தொடர்ந்து சி பி சி ஐ டி, எஸ் பி ஷாஜிதா ஜிதா மற்றும் டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பழனி தண்டபாணி சுவாமி மடம் போலி ஆவண பத்திரப்பதிவு குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் என்ற வழக்கறிஞர் நேற்று மதுரை மத்திய சிறையில் உயிரிழந்திருக்கிறார்.
சிபிசிஐடி
நெஞ்சுவலி காரணமாக அதிகாலை 12.30 மணி அளவில் சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்றிரவு நெஞ்சுவலி காரணமாக சிறையில் உயிரிழந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து வழக்கறிஞர் அன்வர்தீன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய ஜஸ்டின் மணிகண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அன்வர்தீன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஜெயப்பிரகாஷை நீதிமன்ற காவலுக்கு அழைத்துச் செல்லும் பணியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
