கடத்தியவரை பிரிய மனம் இல்லாமல் கதறி அழுத குழந்தை.. தலைசுற்ற வைத்த காவலர்.. 14 மாத பாசப்போராட்டம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 14 மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தையை கடத்திய காவலர், அந்த குழந்தையை 14 மாதங்களாக வளர்ந்து வந்தார். இந்நிலையில் போலீசார் பல கட்ட முயற்சிக்கு பின்னர், போராடி குழந்தையை கண்டுபிடித்த நிலையில், கடத்திய காவலரை விட்டு பிரிய மனமில்லாமல், தாயிடம் வர மறுத்து குழந்தை அடம்பிடித்து கதறி அழுதது. எனினும் குழந்தையை தாயிடம் ஒப்படைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சங்கனேர் சதர் காவல் நிலையத்திற்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பு குழந்தை காணாமல் போனதாக புகார் வந்தது. பிருத்வி என்ற 11 மாத குழந்தை காணாமல் போனதாக அந்த குழந்தையின் தாய் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். குழந்தை கடத்தலில் தொடர்புடையவர்களை போலீசாரால் உடனே அடையாளம் காண முடியவில்லை.. இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட போலீசார், கடத்தப்பட்ட குழந்தை குறித்தோ அல்லது கடத்தியவர்கள் குறித்தோ தகவல் தெரிவித்தால் தலா ரூ. 25,000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் நோட்டீஸ் அடித்தும் ஒட்டினார்கள்.

இந்நிலையில் சிறப்பு தனிப்படை போலீசார் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா, ஆக்ரா, அலிகார் உள்பட பல்வேறு இடங்களில் தேடி ஒரு வழியாக குழந்தையை கடத்தியவரை கண்டுபிடித்து குழந்தையை மீட்டு அவரை கைது செய்தனர். ஆனால் அவரிடம் இருந்து குழந்தை பிரிய மனம் இல்லாமல் கதறி அழுதது. எனினும் குழந்தையை குற்றவாளியிடம் இருந்து பிரித்த போலீசார், தாயிடம் ஒப்படைத்துவிட்டு, குழந்தை கடத்தியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நடந்த சம்பவம் குறித்து ராஜஸ்தான் காவல்துறையினர் கூறுகையில், " பிருந்தாவனத்தில் உள்ள யமுனை நதிக்கு அருகில் ஒரு குடிசை வீட்டில் துறவியாக வசித்து வந்த தனுஜ் சாஹர் என்பவர் தான் குழந்தையை கடத்தி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த இவர் அம்மாநிலத்தின் அலிகரில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைனில் ஏட்டாக வேலை செய்து வந்தவர். ஆனால் ஒரு காலக்கட்டத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். குழந்தையை கடத்திய தனுஜ் முன்பு உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்புக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவில் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார்.
எனவே, அவர் காவல்துறை எப்படி குழந்தை கடத்தல்களை விசாரிக்கும் என்பதையும், போலீசார் எப்படி எல்லாம் தேடுவார்கள் என்பதையும் நன்கு அறிந்து வைத்திருந்திருக்கிறார்.இதன் காரணமாக அவர் மொபைல் ஃபோனை பயன்படுத்தாமல், அடிக்கடி தான் இருக்கும் இடத்தையும் மாற்றி வசித்து வந்தார். அதேபோல, அவர் ஒருவரை சந்தித்தால் மீண்டும் அவரை சந்திப்பதை தவிர்த்து வந்திருந்தார்.
மேலும் குழந்தையை கடத்திய போது இருந்த அடையாளத்தை மறைக்க நீண்ட தாடி வளர்த்துள்ளார். அடிக்கடிஅந்தத் தாடிக்கு வெள்ளை சாயம் பூசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அதேநேரம் கடத்தப்பட்ட பிருத்வியை தன்னுடைய சொந்த மகனாகக் கருதி பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். குழந்தையை கண்டுபிடித்து தன்னிடம் இருந்து போலீஸ் பறித்துவிடக்கூடாது என்பதற்காக பல்வேறு யுக்திகளை கையாண்டுள்ளார். இதன் காரணமாக குழந்தையை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும் கடந்த ஆஸ்ட் 22 ஆம் தேதி தனுஜ் சாஹரைக் கைது செய்ய ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் உத்தரப் மதுரா, ஆக்ரா, அலிகார் பகுதியில் விசாரணை நடத்தினர். ஒருவழியாக பிருந்தாவனத்தின் யமுனை நதிக்கரையில் வசித்து வந்த காவலர் தனுஜை கண்டுபிடித்த ராஜஸ்தான் தனிப்படை போலீசார், அவர் துறவிகள் போல் உடையணிந்து, அப்பகுதியில் தங்கி, பக்தி பாடல்களை பாடியதை கண்டனர்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி தனுஜ் அலிகார் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்ய காவல்துறையினர் வந்தனர். இதைக்கண்ட தனுஜ் கடத்தப்பட்ட குழந்தையுடன் வயல்வெளியில் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை 8 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற ராஜஸ்தான் தனிப்படை போலீசார் அவரைப் பிடித்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.அப்போது கடத்திய தனுஜை பிரிய மனமில்லாமல் குழந்தை கதறி அழுது அடம்பிடித்தது. அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது" என்று கூறினார்கள்.












Click it and Unblock the Notifications