‘தமிழ் கொலை’.. பள்ளிக்கூடங்களை மூடிவிட்டு பொறிகடலை யாவாரம் செய்யலாம்.. ராமதாஸ் ஆவேசம்!
தமிழைத் தேடி பரப்புரை பயண பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார் ராமதாஸ்.
திண்டுக்கல் : "தமிழை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி நிர்வாகங்கள் கூட்டணி வைத்து செயல்படுகின்றனர். தமிழை அழிப்பதற்கு பதிலாக நீங்கள் பொரிகடலை வியாபாரம் செய்யலாம்" என ஆவேசமாகப் பேசியுள்ளார் ராமதாஸ்.
தமிழைத் தேடி பரப்புரைப் பயணம் மேற்கொண்டுள்ள ராமதாஸ், தனது பயணத்தை இன்று மதுரையில் நிறைவு செய்கிறார்.
முன்னதாக, இன்று திண்டுக்கலில் பேசிய மருத்துவர் ராமதாஸ் பிற மொழி கலப்பில்லாமல் தமிழைப் பேச வேண்டும், தமிழ் மொழி அழிந்து வருகிறது என்று கூறியுள்ளார்.

தமிழைத் தேடி
பாமக நிறுவனர் ராமதாஸ், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி, தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை தாய்மொழி தினமான கடந்த 21ஆம் தேதி சென்னையில் தொடங்கினார். இன்று மாலை மதுரையில் இந்தப் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். இன்று காலை திண்டுக்கல்லில் தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அங்காவது தமிழ் இருக்குமா
இந்தக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தமிழைத்தேடி பரப்புரை பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். எந்த இடத்திலும் தமிழைக் காணவில்லை. திண்டுக்கல்லில் வந்து பார்த்தபோது இங்கும் தமிழ் இல்லை. இதனைதொடர்ந்து சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தேடிச்செல்கிறேன். அங்காவது தமிழ் இருக்கிறதா என்று பார்க்க விரும்புகிறேன்.

டாடி - மம்மி
நமது வீடுகளில் பிறமொழி கலந்த பேச்சைத்தான் 95 சதவிகிதம் பேசி வருகிறோம். ஐந்து சதவிகிதம் தான் தமிழில் பேசுகிறோம். இதனை மாற்ற குழந்தையில் இருந்தே பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளில் தமிழில் பேச கற்றுத் தர வேண்டும். ஆனால் இன்றைய குழந்தைகள் டாடி, மம்மி என்று அழைப்பதை பெற்றோர்கள் பெருமையாக கருதுகின்றனர். கல்வி வணிகமயமானதால் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுவதில்லை.

பத்தில் ஐந்து
உயிருக்கு உயிரான தமிழ் மொழியை நாம் வேகமாக இழந்து கொண்டிருக்கின்றோம். வேகமாக தமிழ் அழிந்து கொண்டிருக்கின்றது. அதற்காகத்தான் இந்த பரப்புரை பயணம். தமிழ்நாட்டில் வீடுகளில் பேசக்கூடிய பத்து வார்த்தைகளில் ஐந்து வார்த்தை தமிழ் மொழி. மற்றவை ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் பேசும் நிலைமை தற்போது உள்ளது. தமிழ் மொழி அழிந்தால் தமிழ் இனமே அழியும். இதன் உண்மைத்தன்மையை பலரும் அறியவில்லை. அதனால் தான் இந்த பரப்புரையை மேற்கொண்டுள்ளேன்.

தமிழை அழிக்க
தமிழ்நாட்டில் அப்துல் கலாம் உட்பட பல பேரறிஞர்கள் தமிழில்தான் படித்துள்ளனர். மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பம் உட்பட அனைத்து படிப்புகளும் தமிழில் படிக்க முடியும். தமிழை கட்டாயப் பாட மொழியாக்க வேண்டும் என அரசு சட்டங்கள் போட்டாலும் ஒரு சில பள்ளிகள் இதனை எதிர்த்து உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். தமிழை அழிக்க நீதிமன்றத்திற்கு செல்லாதீர்கள் என பள்ளி நிர்வாகத்தை பார்த்து நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து கேட்டுக் கொள்வோம்.

பொறிகடலை வியாபாரம் செய்யலாம்
அதையும் மீறி அவர்கள் சென்றால் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் அவர்களை சும்மா விடமாட்டார்கள். நான் வன்முறையைத் தூண்டுவதற்காக இதை பேசவில்லை. தமிழில் படிக்க வேண்டும் என தமிழக அரசு போடுகின்ற சட்டத்தை மதிக்க வேண்டும். இதை எதிர்த்து ஒரு சில பள்ளிகள் நீதிமன்றம் செல்கின்றனர். தமிழ்நாட்டில் கல்வியை வணிகம் செய்து வருகின்றனர் பள்ளிகளில் ப்ரீ.கே.ஜிக்கு 2 லட்சம் வசூல் செய்கிறார்கள். தமிழைக் கொல்ல பள்ளிகளை நடத்துகின்றனர். அதற்கு பள்ளிகளை மூடிவிட்டு பொறிகடலை வியாபாரம் செய்யலாம்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications