மல்லிகைப் பூ 1 கிலோ ரூ.5,000! முகூர்த்த நாள், வரத்து குறைவு எதிரொலியால் விலை கிடு கிடு!
திண்டுக்கல்: தை மாதத்தின் முதல் முகூர்த்த நாள் என்பதாலும், பனிப்பொழிவால் வரத்து குறைவாக உள்ளதாலும் மல்லிகைப் பூவின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிலேயே தோவாளைக்கு அடுத்தப்படியாக பூ மார்க்கெட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை உதிரி பூக்கள் ரூ.5,000 வரை விலை போகிறது. இதற்கு காரணம் நாளை மற்றும் நாளை மறுநாள் 2 தினங்களுமே முகூர்த்த நாள் என்பதேயாகும். அதுமட்டுமல்ல கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூ சாகுபடியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்கெட்டிற்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பெண் மல்லிகைப் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் விலை அதிகமாக இருந்தாலும் அதனை திருமண வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.
தை மாதம் முழுவதும் ஏராளமான சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பனிப்பொழிவு குறைந்த பிறகு தான் மல்லிகை சாகுபடி நல்ல முறையில் வரும் என்றும் வரத்து அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. வழக்கமாக ஆயிரம் கிலோவுக்கு மேல் மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்த மல்லிகை பூ பனிப்பொழிவு காரணமாக 300 கிலோ என வரத்து குறைந்துள்ளது.
மல்லிகைப் பூவை போலவே ரோஜாப்பூ உள்ளிட்ட இன்னும் பல பூக்களின் விலையும் முகூர்த்த நாட்களையொட்டி கிடு கிடுவென உயர்ந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் தான் இதனால் கலக்கம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications