இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர்த்த முதல்வர்! 8 மாதங்களில் 321 வீடுகள்! பயனாளிகள் ஆனந்தக் கண்ணீர்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள 321 புதிய வீடுகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
முதலில் திண்டுக்கல்லுக்கு செல்ல திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் பிறகு தனது பயணத்தை ரத்து செய்து, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்தவாறு இந்த நிகழ்வில் பங்கேற்றார்.
திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

1990களில் அகதிகள்
கடந்த 1990ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களை திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டி பகுதிகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முகாம்கள் அமைத்து தங்க வைத்தார். இந்நிலையில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை தீர்க்கும் வகையில் 321 புதிய வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவெடுத்த முதல்வர் ஸ்டாலின் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

என்னென்ன வசதிகள்?
இதையடுத்து கட்டுமானப் பணிகள் காலதாமதமின்றி தொடங்கப்பட்டு மளமளவென பணிகள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள புதிய வீடுகளில் ஒரு வரவேற்பரை, சமையலறை, ஒரு படுக்கையறை, கழிவறை, உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் தார்சாலை, நூலகம், அங்கன்வாடி உள்ளிட்ட வசதிகளும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தால் முகாம்களில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

முகாம் அலுவலகம்
திண்டுக்கல் மாவட்டம் தோட்டனூத்துக்கே சென்று முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ள புதிய வீடுகளை திறந்து வைக்க திட்டமிட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் ஏனோ தெரியவில்லை தனது பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து நிகழ்ச்சியை காணொலி மூலம் நடத்தி அதில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். திண்டுக்கல் தோட்டனூத்து ஊராட்சியில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனந்தக் கண்ணீர்
இதனிடையே தங்களுக்கு எல்லா வசதிகளுடன் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதால் இலங்கைத் தமிழர்கள் ஆனந்தக் கண்ணீருடன் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். விழா மேடையில் பேசிய ஒரு பெண்மணி முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் போது தாங்கள் எவ்வாறு இலங்கையிலிருந்து இந்த முகாமிற்கு வந்தோம் என்ற பழைய பின்னணியை விவரித்தார்.


Click it and Unblock the Notifications
