டூர் வர்றதே அதுக்கு தானா? போதை பொருள் கூடாரமாகும் கொடைக்கானல்! அதென்ன மேஜிக் காளான்? போலீஸ் வார்னிங்
திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் விற்பனையில் ஈடுபட்ட மற்றும் போதை காளான் வாங்க முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போதை காளான் விற்பனையில் ஈடுபட்டாலோ,வாங்க முயன்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் காவல்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலை நோக்கி பயணித்து வருகின்றனர். அதே நேரத்தில் போதைக்கு விருப்பப்பட்டு வரும் பயணிகளை குறி வைக்கும் கும்பலின் நடமாட்டமும் அதிகமாக இருக்கிறது.

பல பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் போதை காளான், கஞ்சா ஆகியவை விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து கொடைக்கானலில் மலைப் பகுதிகளில் அடிக்கடி வனத்துறையினரும் காவல்துறையினரும் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை கும்பலை பிடிக்க தீவிர ரோந்து பணிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. மேலும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சில தங்கும் விடுதி நிர்வாகங்களே நேரடியாக சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் போதை காளான் விற்பனையும் நடைபெற்று வருவதாகவும், மேலும் மெத்தப்பட்டமைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதை வஸ்த்து பயன்பாடானது அதிகரித்து காணப்படுகிறது.
இதனை தொடர்ந்து தனிப்படை அமைத்து காவல் துறையினர் மலைப்பகுதிகளில் ரோந்து பணியிலும், கண்காணிப்பு பணியிலும் ஈடுபடுவதுடன்,மேல்மலை கிராமங்களில் உள்ள டென்ட் கூடாரம்,டூம் ஹவுஸ், ஏ பிரேம் உள்ளிட்ட விடுதிகளில் சோதனையில் ஈடுபட்டு போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை காவல் துறை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மட்டும் போதை வஸ்துக்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மற்றும் வாங்க முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்," கடந்த ஒரு வருடத்தில் மட்டும் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 கஞ்சா வழக்குகள் மற்றும் 8 போதை காளான் வழக்குகள் பதியபட்டு இருப்பதாகவும், இதில் 300கிராம் போதை காளான்கள் மற்றும் 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் 52 நபர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து இருப்பதாகவும் இதற்கு முன்னதாக 40 நபர்கள் கைது செய்து இருப்பதாகவும் கூறினார். மேலும் மலைப்பகுதியில் போதை காளான் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்த்துகள் விற்பனையில் ஈடுபட்டாலும்,வாங்க முற்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். மேலும் மேல்மலை கிராமங்களில் போதை வஸ்த்துகள் விற்பனையை தடுக்க காவல் துறை சோதனை சாவடி அமைக்கப்படும் என்றும், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல் துணை கண்காணிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து கொடைக்கானலில் அதிகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களான கலையரங்கம், ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications