திண்டுக்கல் அருகே இன்று திறக்கப்பட இருந்த சுங்க சாவடி சூறை- அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு லட்சுமிபுரத்தில் இன்று திறக்கப்பட இருந்த சுங்கச் சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர். நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடையாத நிலையிலேயே சுங்க சாவடி மூலம் வசூல் வேட்டையில் இறங்குவதைக் கண்டித்து அப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், லட்சுமிபுரம் சுங்க சாவடியை தாக்கி சூறையாடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து கொடைக்கானல், தேனி, பெரியகுளம், குமுளி செல்வதற்காக வத்தலகுண்டு நகருக்குள் செல்லாமல் புறவழியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இருந்த போதும் இந்த சாலையில் அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

திண்டுக்கல் வத்தலகுண்டு புறவழிச்சாலையானது சிறு சிறு குன்று பகுதிகளை வெட்டி அதனூடாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயண நேரம் வெகுவாக குறைந்தும் வருகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமிபுரம் என்ற இடத்தில் சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை பணிகள் அனைத்தும் முழுமை அடையவில்லை. ஆனால் லட்சுமிபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த சுங்க சாவடிகள் இன்று முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
லட்சுமிபுரம் சுங்க சாவடி இன்று திறக்கப்பட இருந்த நிலையில் அப்பகுதியைச் சுற்றிய கிராம மக்கள் தன்னெழுசியாக திரண்டு, சுங்க சாவடி மீது தாக்குதல் நடத்தினர்; சுங்க சாவடி செயல்படாத வகையில் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இதனால் அந்த நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பும் பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து லட்சுமிபுரம் சுங்க சாவடி பகுதிக்கு வந்த போலீசார், பொதுமக்களின் ஆவேசத்தின் பின்னணி குறித்து விசாரித்தனர். நான்கு வழிச் சாலை பணிகள் முழுமையே அடையாமல் எதற்காக சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என போலீசாரிடம் பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கசாவடியையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு பல நாட்கள் போராட்டம் நடத்தினர். அதேபோல பல்வேறு சுங்க சாவடிகளில் அநியாய கொள்ளை வசூல் வசூலிக்கப்படுவதற்கு எதிராக அவ்வப்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவைகளின் தொண்டர்கள் சுங்க சாவடிகளை தாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக திரண்டு திண்டுக்கல் வத்தலகுண்டு சுங்க சாவடியை சூறையாடியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications