தீபாவளி ஆஸ்தானம்.. திருப்பதியில் ஆர்ஜித சேவைகள் ரத்து.. ஏழுமலையான் பக்தர்களே நோட் பண்ணுங்க
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளதால் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தீபாவளி அன்று ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதம் பல்வேறு சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில், நவம்பர் 9ஆம் தேதி மாதாந்திர ஏகாதசி, 11ஆம் தேதி சிவராத்திரி, 12ஆம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 13ஆம் தேதி கேதார கௌரி விரதம் நடைபெற உள்ளது. 14ஆம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16-ஆம் தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17ஆம் தேதி நாகர் சதுர்த்தி, பெரிய சேஷ வாகனத்தில் ஏழுமலையான், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் 12 ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இது ஆண்டுதோறும் ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் சிறப்பான நிகழ்வு. அன்றைய தினம் சர்வ பூபால வாகனத்தில் மலையப்பசுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளுவார்.
இந்நிகழ்ச்சி பங்காரு வகிலி எனப்படும் தங்க வாசல் முன்பாக நடைபெறும். நவம்பர் 12 ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் போது உற்சவ மூர்த்திகள் மற்றும் விஸ்வசேனா ஆகியோர் கருடாழ்வார் முன் எழுந்தருள்வர். கருடாழ்வார் முன் ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இந்த நாளில் ஏழுமலையானுக்கும் மலையப்பசுவாமிக்கும் சிறப்பு அர்ச்சனைகள் நடைபெறும்.
தீபாவளி ஆஸ்தானம் உற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தீபாவளி அன்று ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. அதே சமயம் சகஸ்ரநாம தீபஅலங்கார உற்சவ சேவை மாலை 5 மணிக்கு வழக்கம் போல் நடைபெறும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
தீபாவளி சிறப்பு உற்சவத்தை முன்னிட்டு அதிகமான பக்தர்கள் திருமலைக்கு வருவார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.
இதனிடையே வைகுண்ட ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு வரும் 10ஆம் தேதி முதல் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. தினசரி 20ஆயிரம் டிக்கெட்டுகள் என மொத்தம் 2 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications