ஆபத்தான நிலைக்கு போன ஆயில் பிரஷர்.. நடுவானில் இன்ஜினை அணைத்த பைலட்! 36,000 அடி உயரத்தில் பரபரப்பு
துபாய்: அமீரக தலைநகர் அபுதாபியை நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இஞ்சினில் திடீரென ஆயில் குறைய ஆரம்பித்தது. ஆயில் ஆபத்தான நிலைக்கு சென்ற நிலையில், விமானத்தை மீண்டும் அவர்கள் கொச்சிக்கே திருப்பினர். சரியான நேரத்தில் பைலட் குழு எடுத்த முடிவால் மிக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பொதுவாகவே விமான பயணங்கள் தான் பாதுகாப்பான ஒன்றாக பார்க்கப்படும். ஆனால் அதிலும் கூட எதிர்பாராத நேரத்தில் நடக்கும் சில சம்பவங்கள் இக்கட்டான சூழல்களை ஏற்படுத்திவிடும். சரியான நேரத்தில் பைலட் குழு எடுக்கும் முடிவுகள் தான் இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் வாழ்வா சாவா முடிவாக இருக்கும்.

ஏர் இந்தியா
அப்படியொரு சம்பவம் தான் இப்போது மீண்டும் நடந்துள்ளது. திருவனந்தபுரம் மாநிலம் கொச்சியில் இருந்து அபுதாபி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நடுவானில் இன்ஜின் ஆயில் அளவு வேகமாக குறைந்ததால் மீண்டும் கொச்சிக்கே திரும்பியது. போயிங் 737 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் IX 415 என்ற நம்பரில் இயக்கப்பட்டது.
விமானம் புறப்பட்டு சுமார் 50 நிமிடங்கள் ஆன நிலையில், 36,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் இஞ்சினில் ஆயில் அளவு வேகமாக குறைந்து வருவதை விமானி மற்றும் துணை விமானி கவனித்தனர். ஆயில் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டு இருந்தது. அதை அப்படியே விட்டால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த விமானிகள், அடுத்து என்ன செய்ய முடியும் என்ற ஆப்ஷன்களை ஆராய தொடங்கினர்.
சரிந்த ஆயில்
ஆயில் தொடர்ந்து குறைந்த நிலையில், அதை அபுதாபி வரை இயக்க முடியாது என்பதை அவர்கள் உணர்ந்தனர். இதையடுத்து விமானத்தை புறப்பட்ட கொச்சி விமான நிலையத்துக்கே திருப்ப முடிவு செய்யப்பட்டது. விமானம் கொச்சி நோக்கி திரும்பிய நிலையில், அதற்குள் இஞ்சின் ஆயில் பிரஷர் ஆபத்தான நிலைக்குள் சென்றது. இதையடுத்து அந்த இன்ஜினை விமான குழுவினர் அணைத்தனர்.
தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தின்போது விமானத்தில் எத்தனை பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் இருந்தனர் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. ஏர் இந்தியா மற்றும் டிஜிசிஏ சார்பில் இதுவரை எந்தவொரு விளக்கமும் வெளியிடப்படவில்லை. நடுவானில் 36,000 அடி உயரத்தில் திடீரென ஏற்பட்ட ஆயில் அளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு
இந்திய விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவை அவசர அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஏர் இந்தியாவின் புக்கெட்-டெல்லி விமானம் தொடர்பான முதற்கட்ட விசாரணை முடிந்தது. அதில் விமானத்தை கஞ்சா போதையில் இயக்கிய விமானி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அவர் கஞ்சா போதையில் இருந்தது விமானத்தில் உயரிழப்பு ஏற்பட காரணம் இல்லை என்றாலும் ஏர் இந்தியா அவரை டிஸ்மிஸ் செய்தது.
இந்தச் சூழலில் தான் மீண்டும் ஆபத்தான அளவுக்கு ஆயில் குறைந்துள்ளது. இது தொடர்பாகவும் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்படும் என தெரிகிறது. விரைவில் இது தொடர்பாக ஏர் இந்தியா தரப்பிலும் விரிவான அறிக்கை வெளியாகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
