துபாய் நூலகத்தில்.. தமிழக தொழிலதிபர் ஏ.ஜே. கமாலின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்! நெகிழ்ச்சி
துபாய்: துபாயில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பிரமாண்டமான நூலகம் முஹம்மது பின் ராஷித் நூலகம். புத்தக விரிப்பு வடிவில் மிக அழகாகக் கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தில் அரபு, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சிறப்புமிக்க நூலகத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஏ.ஜே. கமால் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆங்கில நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

'அன் ஐகான் ஆப் பெர்சிவியரன்ஸ் - கீழக்கரை ஏ.ஜே.கமால் அன் இன்ஸ்பையரிங் ரோல் மாடல்' (விடாமுயற்சியின் அடையாளம் - கீழக்கரை ஏ.ஜே. கமால்: அனைவருக்கும் ஊக்கமளிக்கும் முன்னுதாரணம்) என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஆட்டோவிஷன் நிறுவனத்தின் இயக்குநர் முகம்மது பைரோஸ், இந்த நூலை நூலக அலுவலர் அப்துல் ரஹ்மானிடம் முறைப்படி வழங்கினார்.
இந்நிகழ்வில் அலைடு மோட்டார்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜே.கமால் முன்னிலை வகித்தார். புத்தகத்தை எழுதிய நூலாசிரியர்கள் அப்துல் மஜீத், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் ஓய்வுபெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் அப்துல் காதர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில கொள்கை பரப்பு செயலாளர் எல்.கே.எஸ். மீரான் முகைதீன், பொறியாளர் செய்யது அகமது, அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் ஏ. முகம்மது தாஹா, மின்னணு ஊடகத்துறை செயலாளர் அகமது கபீர், மூத்த ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நூல் வழங்கும் நிகழ்வு முடிந்த பிறகு, நூலகத்தில் உள்ள அரிய கலைப்பொருட்கள் கொண்ட அருங்காட்சியகம் மற்றும் மொழித்தோட்டம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை அனைவரும் நேரில் சுற்றிப் பார்த்தனர்.
நூலகத்தின் நவீன வசதிகளையும் பிரமாண்ட அமைப்பையும் கண்டு அவர்கள் வியந்து பாராட்டினர். உலகத்தரம் வாய்ந்த இந்த அறிவுப் பொக்கிஷத்தை உருவாக்கிய துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமின் தொலைநோக்குப் பார்வை மற்றும் சீரிய திட்டங்களுக்கு அனைவரும் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications
