புர்ஜ் கலீஃபாவை தாக்கிய ஈரான்.. உலகின் மிக உயரமான கட்டிடத்தில் கிளம்பிய புகை! மக்கள் வெளியேற்றம்
துபாய்: அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அதன்படி துபாய் மீதும் ஈரான் தாக்குதலை நடத்தி இருந்தது. இதற்கிடையே உலகின் மிகப் பெரிய கட்டிடமான புர்ஜ் கலீஃபாவும் இதில் மாட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அக்கட்டிடத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இப்போது ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டுள்ளார். இதற்கிடையே ஈரானும் இப்போது பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இஸ்ரேலை குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

துபாயில் தாக்குதல்
அது மட்டுமின்றி, அமெரிக்கத் தளங்கள் இருக்கும் இதர மத்திய கிழக்கு நாடுகள் மீதும் கூட ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் மிக மோசமான ஒரு சூழலே ஏற்பட்டுள்ளது. ஈரானின் பதிலடி நடவடிக்கையில் ஒரு பகுதியாக ஐக்கிய அமீரகத்தின் முக்கிய நகரமான துபாய் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தளம் அங்கு இருக்கும் சூழலில், அதைக் குறிவைத்தே ஈரான் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது.
புர்ஜ் கலீஃபா
இதற்கிடையே ஈரானின் ஏவுகணைகளில் ஒன்று, துபாயில் உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்திற்கு அருகே வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. புர்ஜ் கலீஃபா அருகே வெடிப்பு மற்றும் புகை கிளம்பிய வீடியோ இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. ஈரானுக்குச் சொந்தமான சிறிய ரக ஏவுகணை அல்லது டிரோன் இந்த தாக்குதலுக்குக் காரணமாக இருக்கும் எனத் தெரிகிறது. அதேநேரம் புர்ஜ் கலீஃபாவுக்கு அருகே இந்த தாக்குதல் நடந்ததா அல்லது புர்ஜ் கலீபாவே இதில் சேதம் அடைந்ததா என்பதில் தெளிவான தகவல்கள் இல்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து மக்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டு இருந்தனர். நகரின் பிற பகுதிகளில் தாக்குதல்கள் நடந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டது.
துபாயின் முக்கிய கட்டிடம்
துபாயின் மையப்பகுதியில் 828 மீட்டர் உயரத்தில் கம்பீரமாக நிற்கும் புர்ஜ் கலீஃபா கட்டிடம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாகும். இதன் மதிப்பு சுமார் $1.5 பில்லியன், அதாவது சுமார் ரூ.13,661.98 கோடியாகும் ஆகும். ஆண்டு தோறும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த கட்டிடத்தைப் பார்க்கவே மக்கள் துபாய்க்கு செல்கிறார்கள். இந்த கட்டிடத்தின் 124, 125, 148வது தளங்களில் இருந்தபடியே துபாய் அழகை மக்களால் ரசிக்க முடியும்.
புர்ஜ் கலீஃபா கட்டிடத்தைக் கட்டிய எமார் பிராப்பர்டீஸ் நிறுவனம் அதை சுமார் $1.5 பில்லியனுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர். அதேநேரம் பிரதான கட்டிடத்திற்கு மட்டுமே எமார் பிராப்பர்டீஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் எடுத்துள்ளது. அங்குள்ள தனிப்பட்ட குடியிருப்புகள், ஹோட்டல்கள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவை அதன் உரிமையாளர்களால் தனியாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளன.
துபாயில் எதிரொலிக்கும்
எப்போதும் மத்திய கிழக்கில் மேற்குலக நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் வெடிக்கும் போது அது, துபாயில் வலுவாக எதிரொலிக்கும். அதன்படியே இப்போதும் துபாயில் தாக்குதல்கள் நடந்துள்ளது. ஐக்கிய அமீரகத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ராணுவ தளம் இருப்பதாலேயே துபாய் எப்போதும் இந்த மோதல்களில் சிக்கிக் கொள்ளும்.
அதேநேரம் புர்ஜ் கலீஃபா மட்டுமின்றி, பாம் ஜுமேரா செயற்கைத் தீவிலும் தாக்குதல் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. கருப்புப் புகை எழ, பலத்த சத்தங்கள் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்றனர். இருப்பினும், உடனடியாக களத்தில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள், தீயை முழுமையாக அணைத்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலைமை மோசம்
இதற்கிடையே துபாயில் இருந்து வெளியாகியுள்ள இன்னொரு வீடியோவில் ஈரானின் கொடிய ஷஹீத் ட்ரோன் தாக்குதலில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த துபாயின் ஒரு பகுதியில் இரண்டு கட்டிடங்களுக்கு இடையே விழுந்து வெடித்ததால், பெரும் சத்தமும் தீப்பிழம்புகளும் எழுந்தன. ஷஹீத் ட்ரோன்கள் ஈரானின் மிக ஆபத்தான ஆயுதங்களில் ஒன்றாகும்.
நிலைமை பதற்றமாக இருப்பால் அமைதியாக இருக்கும்படியும் தாக்குதல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.












Click it and Unblock the Notifications