துபாய்லயே பெட்ரோல் ரேட் எகிறியது.. UAE அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி!
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்ச்சூழல், உலகளாவிய எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது அனைவருக்கும் தெரியும். இதன் நேரடி பாதிப்பு, எண்ணெய் வளமிக்க நாடாக இருந்தாலும், துபாயை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) எதிரொலித்தது. அந்நாட்டில் மே 1 முதல் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஈரான் போர் மூலம் ஹார்முஸ் முடங்கியுள்ள காரணத்தால் வளைகுடாவில் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வெளியேறவில்லை. இதனால் உலக நாடுகளில் விலை உயர்வு ஏற்படுகிறது. ஆனால் உள்நாட்டிலேயே அதிகப்படியான கச்சா எண்ணெய் இருப்பு இருக்கும் வேளையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் ஏன் விலை உயர்கிறது.

விலை உயர்வின் பின்னணி என்ன?
UAE-யில் எரிபொருள் விலையை அந்நாட்டு அரசின் "எரிபொருள் விலை கண்காணிப்பு குழு" மூலம் ஒவ்வொரு மாதமும் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த குழு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை, விநியோகச் செலவுகள், மற்றும் உலக சந்தை நிலவரங்களை மதிப்பீடு செய்து ரீடைல் விற்பனை விலையை தீர்மானிக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், போக்குவரத்து மற்றும் விநியோகச் செலவுகளும் அதிகரித்ததால், சூப்பர் 98, சூப்பர் 95 மற்றும் இ-பிளஸ் 91 போன்ற பெட்ரோல் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

"எண்ணெய் வள நாடு" என்றாலும் ஏன் விலை உயர்வு?
பொதுவாக, துபாய் போன்ற நாடுகள் தங்கள் சொந்த எண்ணெய் வளங்களைக் கொண்டதால், ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழித்தடத்தை அதிகமாக சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், இந்நாடுகள் உலகளாவிய சந்தை முறையைப் பின்பற்றும் திறந்த பொருளாதார முறையில் இயங்குகின்றன.
இதனால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலோ அல்லது விநியோகத்தில் தடைகள் ஏற்பட்டாலோ, அதன் தாக்கம் நேரடியாக உள்ளூர் விலைகளிலும் பிரதிபலிக்கிறது. அதாவது, துபாய் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய முடிந்தாலும், உலக சந்தை விலையைப் பின்பற்றும் கொள்கை காரணமாக விலை உயர்வை தவிர்க்க முடியாது.
புவிசார் அரசியல் தாக்கம்
ஈரான் போர் பதற்றம் காரணமாக சர்வதேச எண்ணெய் சந்தையில் கடும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. கப்பல் போக்குவரத்து பாதைகள் பாதிக்கப்படுவது, விநியோக தாமதங்கள், மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் ஆகியவை எண்ணெய் விலையை உயர்த்தும் முக்கிய காரணிகளாக உள்ளன.
தற்போது சர்வதேச வர்த்தக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 112.1 டாலராக உள்ளது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 106.3 டாலராக உள்ளது. அதன் விளைவாக, UAE போன்ற நாடுகளும் விலை உயர்வை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications