ஆண்களின் குரலை மட்டும் முடக்கும் விசித்திர நோய்.. சீனாவில் அரிய வகை பாதிப்பு.. வினோதம்!
பெய்ஜிங்: காதலன் பேசுவது காதில் விழுவதே இல்லை என்று பல பெண்கள் காமெடி செய்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால், சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமான இப்படியொரு மருத்துவப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்தபோது தன் காதலனின் குரல் மட்டும் தனக்குக் கேட்கவில்லை என்பதை உணர்ந்து அந்தப் பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தக் காலத்தில் நாம் துளியும் எதிர்பார்க்காத பல நோய்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி தலையைச் சுற்ற வைக்கின்றன. இப்படிக் கூட நடக்குமா என நாம் யோசிக்கும் அளவுக்குக் கூட நோய்ப் பாதிப்புகள் ஏற்படுகிறது. அப்படித் தான் இங்குச் சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வினோதமான ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

விசித்திரப் பாதிப்பு
சீனாவின் ஜியாமென் நகரைச் சேர்ந்த பெண்ணுக்குத் தான் இந்த விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது. 'ரிவர்ஸ் ஸ்லோப் ஹியரிங் லாஸ்' (Reverse Slope Hearing Loss - RSHL) எனப்படும் ஒரு அரிய வகைக் காது கேளாமை நோயால் அந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்த அதிர்வெண் கொண்ட (Low-frequency sounds) ஒலிகளைக் கேட்கும் திறன் முற்றிலும் பறிபோய்விடும். ஒலியின் ஸ்பெக்ட்ரமில் ஆண்களின் குரல் பொதுவாக இந்த லோ-பிரீக்வென்சி பிரிவில்தான் அடங்கும்.
இதன் காரணமாகவே அந்தப் பெண்ணால் தனது காதலன் உட்பட எந்தவொரு ஆணின் குரலும் கேட்காமல் போய் இருக்கிறது. அந்தப் பெண்ணால் அதிக அதிர்வெண் (High-pitched sounds) கொண்ட பெண்களின் குரல் மற்றும் பிற ஒலிகளைத் தெளிவாகக் கேட்க முடிந்ததே தவிர, தன் காதலன் உட்பட ஆண்களின் குரல்களை மட்டும் கேட்க முடியவில்லை.
என்ன நோய்
பொதுவாக டாக்டர்கள் ஒரு நோயாளிக்குக் காது கேட்கும் திறனைப் பரிசோதிக்க 'ஆடியோகிராம்' என்ற கருவியைப் பயன்படுத்துவார்கள். பொதுவாக வயது முதிர்வு அல்லது தொடர் சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை என்பது இந்த வரைபடத்தில் கீழ்நோக்கிச் செல்லும். அதாவது அவர்களுக்கு அதிக அதிர்வெண் கொண்ட கூர்மையான ஒலிகள் கேட்காது. ஆனால், இந்த அரிய வகை நோயில், வரைபடத்தின் கோடு மேல்நோக்கிச் செல்லும். அதாவது இவர்களுக்கு ஆரம்பக்கட்டப் பாதிப்பாகக் கீழ்நிலை ஒலிகள் கேட்காமல் போய்விடும். இதனால் தான் இதற்கு 'ரிவர்ஸ் ஸ்லோப்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஆண்கள் குரல் கேட்காது
இந்த விசித்திர நோய் வெறும் ஆண்களின் குரலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. லோ-பிட்ச் குரல் கொண்ட பெண்களின் குரலும் இவர்களுக்குக் கேட்காது. அதே நேரத்தில், மெல்லிய அல்லது ஹை-பிட்ச் குரலில் பேசும் ஆண்களின் குரல் இவர்களுக்குக் கேட்கும். இருப்பினும், பொதுவாக ஆண்களுக்குத் தான் பெரும்பாலும் ஹை பிட்ச் வாய்ஸ் இருக்கும் என்பதால் அந்தக் குரல் கேட்காது.
மேலும், மனிதக் குரல்களைத் தாண்டி, மேகங்களின் இடிச் சத்தம், டூபா போன்ற இசைக்கருவிகளின் பேஸ் ஒலிகள் போன்றவையும் இவர்களின் காதுகளை எட்டாது. இந்த நோயின் மிகப்பெரிய ஆபத்தே, இதை ஆரம்பத்தில் கண்டறிவது மிகக் கடினம். மனிதர்கள் பொதுவாகக் கூர்மையான ஒலிகள் கேட்காமல் போனால் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால், இந்த பேஸ் ஒலிகள் மெல்ல மெல்ல மறைவதை உணர்வதற்குப் பல வருடங்கள் கூட ஆகலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
எதனால் ஏற்படும்?
காதுகளின் உள் பகுதியில் திரவ அழுத்தம் மாறுபடுவதால் ஏற்படும் 'மெனியர்ஸ் நோய்' (Meniere's disease), வைரஸ் தொற்றுகள், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் மூளையைச் சுற்றியுள்ள அழுத்த மாறுபாடுகள் காரணமாக இந்த நோய் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்! பாதிப்பு நிரந்தரமாகும் பட்சத்தில், பிரத்தியேக ஹியரிங் எய்டுகளை பயன்படுத்த வேண்டி இருக்கும்.












Click it and Unblock the Notifications