பள்ளி பேருந்துக்கு ரூ.3 லட்சம்.. ஸ்கூல் பீஸ் ரூ.17.7 லட்சம்! சர்வதேச பள்ளியின் கட்டணம் மிரள வைக்குது!
துபாய்: குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமானது என்பதால் பெற்றோர்கள் எப்போதுமே கல்வியில் சமரசம் செய்ய மாட்டார்கள். இதனால் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பெஸ்ட்டான பள்ளியிலேயே படிக்க வைப்பார்கள். அப்படி தான் தனது குழந்தையை சர்வதேச பள்ளியில் சேர்த்துள்ள தாய் ஒருவர், தனது மகனுக்கு ஆகும் செலவுகள் குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார்.
குழந்தைகளுக்கான பள்ளியை தேர்வு செய்யும்போது கல்வி தரம் முக்கியமானது. ஆனால், அது மட்டுமின்றி பள்ளி அமைந்திருக்கும் இடம், பள்ளியில் உள்ள வசதிகள், போக்குவரத்து மற்றும் கற்றல் சூழல் என பல விஷயங்களை பெற்றோர் கவனிக்கின்றனர். ஆனால் துபாயில் சர்வதேச பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கட்டணத்துடன் சேர்த்து பல்வேறு கூடுதல் செலவுகளும் இருப்பதால், ஆண்டுக்கான மொத்த செலவு கணிசமாக அதிகரிக்கிறது.

துபாய் பள்ளி
துபாயில் வசிக்கும் வெரோனிகா என்ற பெண் இரு குழந்தைகளுக்கு தாய்.. அவர் தனது மகளின் பள்ளி கல்விக்காக ஆண்டுதோறும் செலவிடும் தொகையை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது மகள் துபாயில் உள்ள பிரபல பள்ளியில் படிக்கிறார். அங்கு பள்ளி கட்டணம் எவ்வளவு என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிய நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
பள்ளி கட்டணம்
அங்கு பள்ளியில் குழந்தை சேர்வதற்கு முன்பே முதல் செலவு தொடங்கிவிடுகிறது.. இது தொடர்பாக அவர் மேலும், "பள்ளியின் மதிப்பீட்டுக் கட்டணமாக 525 திர்ஹாம், அதாவது சுமார் ரூ.13,000 செலுத்த வேண்டும். அங்கு மிக பெரிய செலவாக இருப்பது ஆண்டு கல்வி கட்டணம் தான். பள்ளியில் ஆண்டுக்கு சுமார் 55,000 திர்ஹாம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.14.34 லட்சம் ஆகும். இந்த கட்டணத்தை தவணைகளிலும் செலுத்த முடியும் என்றாலும் குழந்தைக்கு பள்ளியில் தேவையான அனைத்து பொருட்களும் இந்த கட்டணத்தில் அடங்குவதில்லை.
இதனால் கல்விக்கான மொத்த செலவு மேலும் அதிகரிக்கிறது. அடுத்து அங்கு கூடுதல் செலவுகளில் முக்கியமானது போக்குவரத்து செலவு. அங்கு பள்ளி பேருந்துக்காக ஆண்டுக்கு சுமார் 12,000 திர்ஹாம், அதாவது சுமார் ரூ.3.12 லட்சம் செலவாகிறது என்று வெரோனிகா கூறியுள்ளார். நம்ம ஊரை போலவே காலையில் வீட்டில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வது, மாலையில் வீட்டிலேயே திரும்ப விட்டுவிடுவது ஆகியவற்றுக்கு தான் இந்த ரூ.3 லட்சம். வேலைக்கு செல்லும் பெற்றோருக்கு இந்த வசதி உதவியாக இருந்தாலும், அதற்கான கட்டணம் குடும்பத்தின் கல்வி செலவை மேலும் அதிகரிக்கிறது.
மொத்த செலவு
பள்ளி சீருடைக்காக சுமார் 1,000 திர்ஹாம், அதாவது சுமார் ரூ.26,000 செலவாகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிக் கட்டணத்தில் உணவு சேர்க்கப்படவில்லை. இதனால் குழந்தைக்கு மதிய உணவை பெற்றோரே ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. வெரோனிகா தனது மகளுக்காக தினமும் காலையில் மதிய உணவைத் தயாரித்து, லஞ்ச்பாக்ஸில் போட்டு குழந்தைகளை கிளப்ப வேண்டி இருக்கிறது.
கல்விக் கட்டணம் மட்டும் சுமார் ரூ.14.34 லட்சமாக இருக்கும் நிலையில், பள்ளி பேருந்து மற்றும் சீருடை செலவையும் சேர்த்தால், ஆண்டு செலவு சுமார் ரூ.17.72 லட்சமாக உயர்கிறது. இதில் பள்ளியின் பிற கட்டணங்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பிற செலவுகள் சேர்க்கப்படவில்லை. எனவே, துபாயில் சர்வதேச பள்ளியில் குழந்தையை படிக்க வைக்கும்போது உண்மையான செலவு இதைவிட அதிகமாக இருக்கலாம்.
விவாதம்
வெரோனிகாவின் இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார்கள். நெட்டிசன்கள் சிலர் சர்வதேச பள்ளிகளின் கட்டணம் இவ்வளவு அதிகமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர். இன்னும் சிலர் கல்விக் கட்டணம் கூட ஓகே பிற கட்டணங்கள் தான் அதிகமாக இருப்பதாகப் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
