துபாய் வாழ் இந்தியர்களே கவனம்.. கொஞ்சம் மிஸ்ஸானாலும் ரூ.2.60 கோடி அபராதம்! புதிய சட்டம் சொல்வது என்ன
துபாய்: அமீரகத்தில் இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தென்னிந்தியர்கள், அதிகளவில் வேலைக்காக செல்கிறார்கள். அப்படி செல்வோர் பலரும் ஒரே வீட்டை எடுத்து அதை ஷேர் செய்து தங்குகிறார்கள். உரிய விதிமுறைகளை பின்பற்றி இதுபோல ஷேர் செய்தால் பிரச்சினை இல்லை. ஆனால், சட்டத்திற்கு புறம்பாக இதுபோல வீடுகளை ஷேர் செய்தால் கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்துள்ளது.
துபாயில் சமீபத்தில் வீடுகளை ஷேர் செய்வது தொடர்பாக புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அதிக நபர்கள் தங்கியிருப்பது, அனுமதியின்றி வீடுகளில் அறைகள் பிரித்து வாடகைக்கு விடுவது தடை செய்யப்பட்டது. அதன்படி இனிமேல் இது போன்ற புகார்கள் வந்தால் அதிகாரிகள் விசாரணை நடத்த முடியும். வழக்கமான ஆய்வுகள் மட்டுமின்றி, திடீர் ஆய்வுகளையும் நடத்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

துபாய் சட்டம்
இந்த சட்டம் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. Shared Housing, அதாவது ஒரே வீட்டை பல பகுதிகளாக பிரிந்து வசிப்பதை ஒழுங்குபடுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும். ஒரு வீட்டில் எத்தனை பேர் தங்கலாம், ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச இடம், பொதுவாக பயன்படுத்தப்படும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளையும் இந்த சட்டம் நிர்ணயிக்கிறது.
துபாயில் வீடுகளில் அதிக எண்ணிக்கையிலானோர் தங்குவது மற்றும் அனுமதியின்றி ஒரே வீட்டை பல பிரிவுகளாக பிரித்து வாடகைக்கு விடுவதால் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. 2008ம் ஆண்டிலேயே, உரிய அனுமதியின்றி அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களை ரூம் ரூமாக பிரித்து பல குடும்பங்கள் தங்கியிருப்பதை கண்டறிந்த துபாய் நகராட்சி இதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்திருந்தது.
ரூம்களை பிரிப்பது
2025ம் ஆண்டில் சட்டவிரோதமாக ரூம்பகளை பிரிப்பது, ஒரே வீட்டில் பலரை தங்க வைப்பது ஆகியவற்றுக்கு எதிரான ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டன. அல் ரிக்கா, அல் முரக்காபத், அல் பர்ஷா, அல் சத்வா, அல் ரஃபா உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மரத்தால் அமைக்கப்பட்ட தற்காலிக அறைகள், சமையலறைகளைப் படுக்கையறைகளாக மாற்றியது போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
இதுபோல ஒரு வீட்டை பிரித்தால் வாடகை குறையும் தானே.. இதில் என்ன சிக்கல் என ஒருவர் கேட்கலாம். இதுபோல அளவுக்கு அதிகமாக ஒரே இடத்தில் தங்குவது, அனுமதி இல்லாமல் வீட்டை பிரிப்பது ஆகியவை எமர்ஜென்சி நேரங்களில் உயிரை பறிக்கும்! இதன் காரணமாகவே இதுபோல சட்டவிரோதமாக ரூம்களை பிரித்து வாடகைக்கு விட வேண்டாம் என தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதிகாரம்
புதிய சட்டத்தின் கீழ் அனுமதியின்றி இதுபோல வீடுகளை பகிர்ந்து இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது வரும் புகார்களை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு விசாரிக்கலாம். இதற்கு முன்பு வரை ஆதாரம் இருந்தால் மட்டுமே புகாரளிக்க முடியும் என இருந்தது. அதை மாற்றி சந்தேகம் இருந்தாலே புகாரளிக்கலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும், புகார் அளிப்பவர் விதிமீறலை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அபராதம்
இதுபோல அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது வீட்டில் இருப்போர் கட்டாயம் ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டும். விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சரிபார்க்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது. எனவே, ஆய்வுக்கு முறையாக ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் AED 1 மில்லியன், அதாவது 2.60 கோடி ரூபாய் வரை கூட அபராதம் விதிக்கப்படும்.


Click it and Unblock the Notifications
