துபாயின் வேலை தேடும் சுற்றுலா விசா.. வேலை தேடுவதற்காகவே இந்தியர்கள் செல்லலாம்.. அறிய வேண்டியவை
துபாய்: இந்தியர்கள் உள்ளூர் முதலாளி அல்லது ஸ்பான்சர் இன்றியே வேலை தேட துபாய்க்கு செல்ல முடியும். அதற்கு நீங்கள் அறிய வேண்டிய தகவல்கள் பற்றி சர்றே விரிவாக பார்ப்போம். ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்ற விரும்பும் தகுதிவாய்ந்த இந்திய வல்லுநர்கள், உள்ளூர் முதலாளி அல்லது ஸ்பான்சரைக் கண்டறிவதற்கு முன்பாகவே வேலை தேடுவதற்காக துபாய்க்குள் நுழையலாம். துபாயின் 'வேலை தேடும் சுற்றுலா விசா', தகுதியுள்ள வேலைதேடுபவர்கள் நேர்காணல்களில் பங்கேற்கவும், ஆள்சேர்ப்பு நடைமுறைகளில் கலந்துகொள்ளவும், அங்குள்ள வேலை வாய்ப்புகளை நேரில் ஆய்வு செய்யவும் அனுமதி அளிக்கிறது.
வேலைக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இடம்பெயர யோசிக்கும் இந்தியர்களுக்கு, இந்தியாவிலிருந்தே வேலைக்கு விண்ணப்பிப்பதற்குப் பதிலாக, துபாயிலிருந்தபடியே வேலை தேட இந்த விசா ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்கிறார்கள். எனவே இந்திய விண்ணப்பதாரர்கள் தங்கள் தேவைக்கேற்ப 60 நாட்கள், 90 நாட்கள் அல்லது 120 நாட்கள் செல்லுபடியாகும் விசாவைத் தேர்ந்தெடுத்து பயணித்து வரலாம். பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒப்புதல்களுக்கு உட்பட்டு நீங்கள் துபாயில் ஒட்டுமொத்தமாக 180 நாட்கள் தேவைப்பட்டால் நீட்டித்துக் கொண்டு தங்கலாம். அதாவது 3மாதம் முதல் நான்கு மாதம் வரை வேலை தேடும் விசா தருவார்கள். தேவைப்பட்டால் 6 மாதம் வரை மொத்தமாக நீட்டிக்க முடியும்.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் இருந்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பொதுவாக ஒரு இளங்கலை பட்டம் அல்லது அதற்கு இணையான தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தேடும் வேலைகள், ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள மற்றும் அமீரகமயமாக்கல் அமைச்சகத்தின் (MOHRE) வகைப்பாட்டின்படி திறன் நிலை 1, 2 அல்லது 3-ன் கீழ் இருக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச தரவரிசைகளின் கீழ் உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்த இந்திய இளம் பட்டதாரிகளும் இதற்குத் தகுதி பெறலாம். விண்ணப்பதாரர்கள் அமீரகத்தில் தங்கியிருக்கும் காலத்தில் தங்களைப் பராமரித்துக் கொள்ளப் போதிய நிதி ஆதாரம் இருப்பதை நிரூபிக்க வேண்டியதிருக்கும். அதாவது பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்து சென்றாலும், அங்கு தங்கி வேலை தேட வேண்டும் என்றால், கண்டிப்பாக வங்கி கணக்கில் போதிய பணம் உள்ளதை நிரூபிக்க வேண்டியது அவசியம்.
இந்திய வேலை தேடுபவர்களுக்குத் தேவையானவை:
குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட், சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் சான்றளிக்கப்பட்ட கல்விச் சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் தயார் செய்ய வேண்டும்.
விண்ணப்பதாரர் எந்த பிரிவில் வேலை தேடுகிறார் என்கிற பிரிவைப் பொறுத்து, அங்கு தங்குவதற்கான நிதி ஆதாரத்திற்கான ஆதாரமும் கேட்கப்படும்.
விண்ணப்பங்களை துபாயின் GDRFA ஆன்லைன் வாயில்கள் மூலமாகவோ அல்லது அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தின் (ICP) மூலமாகவோ தாராளமாக இந்த வேலை விசாவிற்கு சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டு, விசாவின் கால அளவைத் தேர்ந்தெடுத்து, தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி, அதற்கான கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஒப்புதல் அளிக்கப்பட்டதும், விசா மின்னணு முறையில் வழங்கப்படும்.
இந்த வழியைப் பயன்படுத்தத் திட்டமிடும் இந்தியர்களுக்கான முக்கிய நன்மைகள் என்னவென்றால், அவர்கள் துபாயில் நேரில் இருந்துகொண்டே பொருத்தமான வேலைகளைத் தேடலாம், முதலாளிகளைச் சந்திக்கலாம் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கலாம்.
இருப்பினும், இந்த விசாவைப் பெறுவது வேலைக்கு உத்தரவாதம் அளிக்காது. வேலைதேடுபவர்கள் சமீபத்திய தகுதித் தேவைகள், கட்டணங்கள் மற்றும் நிபந்தனைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசின் இணையதளங்கள் மூலம் சரிபார்க்க வேண்டும். மேலும், வேலை அல்லது விசாவிற்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூறும் ஏஜென்சிகள் அல்லது நபர்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
