174 பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித்! இப்போது உடல்நிலை எப்படி இருக்கு.. மிக முக்கிய தகவல்
துபாய்: ஃப்ளைதுபாய் விமானத்தில் துணை விமானி நடத்திய கூறப்படும் தாக்குதலில் படுகாயமடைந்த இந்திய விமானி கேப்டன் சுமித் மச்சார், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இவர் இப்போது நலமுடன் இருப்பதாகவும், உடல்நிலை தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதர் தீபக் மிட்டல் தெரிவித்துள்ளார்.
ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ1073 விமானம் புதன்கிழமை துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கி 174 பேருடன் புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, துணை விமானி ஒருவர் பைலட் சுமித் மச்சாரை கத்தியால் தாக்கியதாக கூறப்படுகிறது. விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

என்ன நடந்தது!
இந்த தாக்குதலில் சுமித் மச்சார் படுகாயமடைந்தார். விமானத்தின் கட்டுப்பாட்டை மீட்க நடந்த போராட்டத்தின்போது அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. படுகாயமடைந்த போதிலும் சுமித் மச்சார் துணிச்சலாக போராடியதே அங்குள்ளவர்களை காப்பாற்றியது. இதையடுத்து விமானம் அவசரமாக சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தபுக் நகரில் தரையிறக்கப்பட்டது. சுமித் மச்சார் சரியான நேரத்தில் செயல்பட்டதே பயணிகள் உயிரை காப்பாற்றியது.
உடல்நிலை எப்படி இருக்கு?
தபுக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுமித் மச்சார், பின்னர் மேல்சிகிச்சைக்காக அமீரகத்துக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரையும் அவரது குடும்பத்தினரையும் இந்திய தூதர் தீபக் மிட்டல் மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். இது குறித்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், "கேப்டன் மச்சார் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவர் நன்றாக குணமடைந்து வருகிறார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமித் மச்சாரின் தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்திய தூதரகம் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி
தாக்குதல் நடந்த புதன்கிழமை இரவு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் தான் சுமித் மச்சாரின் உடல்நிலை குறித்து முதலில் தகவல் வெளியிட்டிருந்தது. தபுக் நகரில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விமானத்தில் இருந்த 174 பயணிகளும் துணை விமானியின் முயற்சி முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பாக இஸ்ரேலை சென்றடைந்தனர்.
பைலட் ஸ்மித்தை தாக்கி விமானத்தை விபத்தில் சிக்க வைக்க முயன்றவர் ஓமன் நாட்டை சேர்ந்தவர் என்று இஸ்ரேல் அதிகாரிகள் கூறுகிறார்கள். அவர் தான் சுமித் மச்சாரை கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது விமானத்தை பைலட் இருவருமே கட்டுப்படுத்தாத நிலையில், சில நொடிகளில் விமானம் சுமார் 14,000 அடி உயரம் சரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ரத்த வெள்ளம்
ரத்த வெள்ளத்தில் காக்பிட் தரையில் கிடந்த நிலையிலும், சுமித் மச்சார் கடைசி சக்தியை பயன்படுத்தி காக்பிட் கதவை திறந்துள்ளார். அவரது இந்த ஒரு செயல் தான் விமானிகள் உயிரை காப்பாற்றியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட பலரும் இந்திய விமானியான ஸ்மித்தை பாராட்டி வருகிறார்கள். ஸ்மித் கதவை திறந்தவுடன் பயணிகள் மற்றும் விமான குழுவினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிறகு விமானத்தில் இருந்து இரு விமானிகள், அதை பத்திரமாக தரையிறக்கினர்.


Click it and Unblock the Notifications
