துபாய் ஏர்போர்ட்டில் தவிக்கும் பி.வி. சிந்து! "ஓயாமல் அடிக்கும் சைரன்கள்.. நிலைமை மோசம்!" பரபர பதிவு
துபாய்: ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே அந்த பிராந்தியம் முழுக்க பெரும் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானை குறிவைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த தாக்குதலில் கமேனி உயிரிழந்துவிட்டார். மேலும், பல முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் இதில் கொல்லப்பட்டுள்ளனர்.

துபாய் விமான நிலையம் மூடல்
இந்த போர் பதற்றங்களால் மத்திய கிழக்கில் விமானச் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை துபாய் விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து விமான நிலையச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதால், ஆல் இங்கிலாந்து ஓபன் தொடருக்கு அவர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பி.வி. சிந்து
வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும் ஆல் இங்கிலாந்து ஓபனில் பங்கேற்க பர்மிங்காம் செல்ல சிந்து துபாய் சென்றிருந்தார். அப்போது தான் இந்த தாக்குதலால் அங்கேயே சிக்கியுள்ளார். சிந்து உட்படப் பல ஆயிரம் பயணிகள் என்ன செய்வது என்று புரியாமல் சிக்கித் தவித்து வருகிறார்கள். துபாயிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அவர் அங்குச் சிக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையச் சூழலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்த சிந்து, 'அடுத்த அறிவிப்பு வரும் வரை அனைத்து விமானச் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன' எனக் குறிப்பிட்டிருந்தார்.
புரிந்து கொள்ளவே முடியவில்லை
இதற்கிடையே துபாயில் தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து தனது அச்சத்தையும் அதிர்ச்சியையும் பி வி சிந்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், "இங்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம். தலைக்கு மேல் தொடர்ந்து ஒலி எச்சரிக்கைகள் கேட்டுக் கொண்டே இருக்கிறது. நிலைமை இவ்வளவு வேகமாக மோசமாவதையும் பார்க்கவே பயமாகவும் திகிலூட்டுவதாகவும் இருக்கிறது.
நிறையக் கவலையளிக்கும் வீடியோக்கள் வெளிவருகின்றன, இதுதான் துயரமான யதார்த்தம். நான் ஆழமாக நேசிக்கும் துபாய், எப்போதும் பாதுகாப்பாகவும் உயிர்த்துடிப்புடனும் உணர்த்திய நகரம்! இதன் காரணமாகவே இந்தத் தருணத்தைப் புரிந்து கொள்வது மேலும் மேலும் எனக்குக் கடினமாக இருக்கிறது.
பாதுகாப்பாக இருக்கிறேன்
நான் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய மெசேஜ் செய்த அனைவருக்கும் நன்றி, அவை எனக்கு மிகவும் முக்கியமானது. நான் தற்போது என் டீமுடன் துபாயில் பாதுகாப்பாக இருக்கிறேன். ஈரானுடனான போர்ச் சூழல் மாறிவரும் நிலையில், நாங்கள் நலமாக இருக்கிறோம்.
துபாய் விமான நிலையம் குழப்பமாக உள்ளது. பல குடும்பங்கள் அங்கேயே சிக்கித் தவிக்கின்றன. நாம் அனைவரும் விரைவில் இதைக் கடந்து செல்ல வேண்டும் என்று நம்புகிறோம். வாழ்க்கை எவ்வளவு எளிதில் நொறுங்கும் என்பதை இது போன்ற தருணங்கள் நினைவூட்டுகின்றன. அனைவரது பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்திக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்..












Click it and Unblock the Notifications