பஹ்ரைனில் ஒலித்த சைரன்கள்! ஈரானின் ட்ரோன் தாக்குதலால்.. மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்!
துபாய்: பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது, ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் புரட்சிகர காவல் படை அறிவித்ததை தொடர்ந்து.. இன்று பஹ்ரைனில் மீண்டும் சைரன்கள் ஒலித்திருக்கின்றன. இதையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க கடற்படையின் 5வது படை பிரிவின் தலைமையகம் அமைந்துள்ள பஹ்ரைனில், இன்று அதிகாலை சைரன்கள் ஒலித்தன. பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட இரண்டு தனித்தனி எச்சரிக்கை பதிவுகளில், மக்கள் பதற்றம் அடையாமல் அமைதி காக்குமாறும்.. அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பாதுகாப்புக்காக அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு, பஹ்ரைன் விடுத்துள்ள முதல் அச்சுறுத்தல் எச்சரிக்கை இது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ ரேடார் அமைப்பின் மீது, தங்கள் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இன்று அரசு தொலைக்காட்சி மூலம் அறிவித்துள்ளது. டெலிகிராம் தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பஹ்ரைனில் உள்ள 'அல் ரிஃபா' ஹெலிகாப்டர் தளத்தில் அமைந்துள்ள, அமெரிக்க பாதுகாப்பு ரேடார் அமைப்புகளை குறிவைத்து.. தங்கள் விண்வெளி படைக்கு சொந்தமான 6 ட்ரோன்களின் மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் விரோத நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது.
ஈரான்-அமெரிக்காவுக்கு கடந்த பிப்ரவரி முதல் மோதல் நடந்து வருகிறது. இருப்பினும் இந்த காலங்களில் பஹ்ரைன் மீது, ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியது இல்லை. இருப்பினும் தற்போது பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் நடத்தி இருக்கும் தாக்குதல், எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு எதிராக அந்நாட்டின் படைப்பிரிவுகள்.. எந்த நாட்டில் இருந்தாலும் அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதை தெரிவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதற்கு முன்பு, நவம்பர் 13ஆம் தேதி அன்று பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஆரம்ப கட்ட எச்சரிக்கை ரேடார் அமைப்பை தாக்கியதாக ஈரான் கூறியிருந்தது. ஆனால், பஹ்ரைனை நோக்கி வந்த இரண்டு ஈரானிய ட்ரோன்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாகவும், எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க ராணுவம் மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
