இளையராஜா, ரஜினிகாந்த், இப்போ சச்சின்.. இளையவர்கள் தங்களை முந்தும்போது ஏன் இந்த இளக்காரம்?
சென்னை: இளையராஜா, ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர் போன்ற தத்தம் துறை ஜாம்பவான்களுக்கு ஏன் அடுத்த தலைமுறை தங்களை தாண்டி வளருவதை ஏற்க முடியவில்லை என்ற கேள்விகள் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ளன.
இம்மூன்று பெரிய ஜாம்பவான்களையும், மக்கள் ஏன் இந்த விமர்சனத்திற்கு உள்ளே கொண்டுவருகிறார்கள் என்பதற்கு 3 சம்பவங்களும் உள்ளன.

ரஜினிகாந்த்: மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உலக நியதி. அந்த வரிசையில்தான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விடவும், அடுத்த தலைமுறை நடிகரான தளபதி விஜய்க்கான ரசிகர் வட்டம் அதிகரித்ததும் மாற்ற முடியாத நியதி. ரசிகர் படையை அதிகம் கொண்டது, விஜயா, அஜித்தா, சூர்யாவா, சிவகார்த்திகேயனா, தனுஷா என்ற போட்டி ஆரோக்கியமானது. ஆனால் ரஜினி, விஜயை போட்டியாக நினைத்தால் அதுதான் ஆபத்தானது. குறுகியமனப்பான்மையானது. அந்த மனப்பாங்கிற்கு ஏற்கனவே ரஜினி ரசிகர்கள் முழுவதுமாக தஞ்சமடைந்துவிட்டது சமூக வலைத்தளங்களில் அம்பலமான விஷயம்தான். ஆனால் ரஜினியே அப்படியாக விஜய்க்கு எதிராக வரிந்து கட்டியதுதான் முகம் சுளிக்க வைத்துவிட்டது. ஜெயிலர் ஆடியோ லாஞ்ச் நிகழ்வில் பேசிய ரஜினிகாந்த், "பீஸ்ட் சரியாக ஓடாத படம், அந்த படத்தோட இயக்குநரை ஜெயிலருக்கு இயக்குநராக்கினேன்" என்று தேவையில்லாமல் சீண்டினார். அதைவிட மோசமாக, "காக்கா என்னதான் பறந்தாலும், கழுகாக முடியாது" என்றார். யாரையும் குறிப்பிடவில்லை என்று ரஜினி சொன்னதை, விஜயே நம்பவில்லை என்பதைத்தான் லியோ சக்சஸ் மீட்டில் விஜய், "காக்கா, கழுகு" என்று பேசிக்கொண்டே, குபீர் என்று சிரித்தபடி, மைக்கை விட்டு 2 அடி தள்ளி ஓடியது, காட்டிக்கொடுத்துவிட்டது.

இளையராஜா: பெருமித மனப்பான்மைக்கு சொந்தக்காரர் இசைஞானி இளையராஜா என்பது பலராலும் பலமுறை வைக்கப்படும் விமர்சனம். அதன் உச்சம், இயக்குநரும், நடிகருமான மனோபாலா இரங்கல் செய்தியின்போது எதிரொலித்துவிட்டதாக குமுறல்கள் உண்டு. "வீட்டில் இருந்து நான் கிளம்பி கோடம்பாக்கம் மேம்பாலத்தை தாண்டும் நேரத்தில் நான் வரும் நேரத்துக்காக பாலத்தில் காத்திருந்த எத்தனையோ இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர்.' என்று இளையராஜா இரங்கல் குறிப்பு சொன்னதை யாரும் ரசிக்கவில்லை. இரங்கலிலும் தன் துதிபாடுவதா என்ற ஏளனப்பேச்சுகளைத்தான் இளையராஜா பரிசாக பெற வேண்டியதாக மாறியது.

சச்சின் டெண்டுல்கர்: ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி தன்னை விஞ்சிய விராட் கோலியை பாராட்டி வெளியிட்ட ட்வீட் மற்றும் அளித்த பேட்டியில், "கோலி முதல்முறையாக ட்ரெஸ்சிங் ரூமிற்குள் வந்தபோது தனது காலில் விழுந்து ஆசி பெற்றார்" என்று குறிப்பிட்டிருந்தார் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர். இதை வலிந்து சொல்லியிருக்க அவசியமில்லை என்பதுதான் விராட் கோலி ரசிகர்களின் வாதமாக உள்ளது. 'தனது காலில் விழுந்ததால்தான் கோலி இந்த உயரத்தை தொட முடிந்தது..' என்ற தொனி அல்லது, 'இவர் எனது காலுக்கு கீழேதான்ப்பா..' என்ற தொனி ஆகிய இரண்டும் அதில் தொனிப்பதால், கிரிக்கெட்டின் கடவுள் இதை தவிர்த்திருக்கலாம் என்பது விராட் ரசிகர்கள் மற்றும் சச்சின் ஹேட்டர்களின் வாதம்.
தர்ம சங்கடம்: மேலே குறிப்பிட்ட மூவருமே தங்கள் துறைகளில் அசைக்க முடியாமல் கோலோச்சியவர்கள். 90ஸ் கிட்ஸ்களின் குழந்தை பருவ கதாநாயகர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் வயது மூப்புக்கு பிறகு குறிப்பாக தங்கள் துறையில் தங்களை சிலர் தொட ஆரம்பிக்கும்போது இவர்களின் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகுவதை போலவே அமைந்துவிட்டது. இது அவர்கள் ரசிகர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது.
ஏன் இப்படி: சீனியர்களின் இந்த செயல்பாடு ஏன் இப்படி மாறிவிட்டது என்பது குறித்து உளவியல் நிபுணர்களிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவர்கள் கூறியது இதுதான்: பணி ஓய்வு பெற்ற நமது தந்தையோ, தாத்தாவோ எப்படியான உளவியலில் இருப்பார்களோ அப்படித்தான் இப்போது தங்கள் துறைகளில் ஓய்வு பெற்றவர்கள் அல்லது, ஓய்வு பெறும் நிலையில் இருப்பவர்கள் மனநிலையும் இருக்கும். தங்களை யாரும் மதிக்கவில்லையோ என்ற எண்ணம் தங்களை முன்னிலைப்படுத்த அவர்களை தூண்டும். ஒரு தலைமுறையே இன்னும் தங்களைத்தான் ஆதர்ஷ நாயகன் என்று நினைக்கிறது என்பது அவர்களுக்கு புரியாது. அவர்களின் பக்தர்களுக்கும் புரியாது.

ரஜினி ரசிகராக தன்னை, திரையில் காட்டிய விஜயை கூட, ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்காமல் போனதற்கான காரணம் இதுதான். இளையவர்கள் தங்களை எப்போதாவது தெரிந்தோ தெரியாமலோ சீண்டியிருந்தாலும், நமது உயரத்திற்கு அதை தொடாமல் கடந்து போக வேண்டும் என்றும் இவர்கள் நினைக்க மாட்டார்கள். சச்சினும், இளையராஜாவும் கூட தங்களை முன்னிலைப்படுத்த சில வார்த்தைகளை பயன்படுத்தினர். அது சாதாரண உளவியல்தான். இதற்காக அவர்களின் திறமையை குறைத்து பேசி விமர்சிப்பது சரியல்ல. அவர்கள் என்றுமே உயரத்தில் வைத்து போற்றப்பட வேண்டியவர்கள்.
சீனியர்களின் இப்போதைய பேச்சை வைத்து அவர்கள் திறமையை எடை போடாதீர்கள். ஏனெனில் நீங்கள் ஆதரவு அளிக்கும் திறமையாளர்களும் சீனியர்களான பிறகு அந்த உளவியலுக்குதான் போவார்கள். சீனியர்களை விமர்சித்தால் அவர்களுக்கு தங்களை இந்த தலைமுறை மதிக்கவில்லையோ என்ற எண்ணம் மேலும் மேலும் அதிகரித்து மேலும் தவறுகளையே செய்வார்கள். எனவே வாழ்த்துங்கள், வாழுங்கள் என்பதே உளவியலாளர்கள் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications