'வேங்கை மவன் ஒத்தைல நிக்கேன்.. தில்லிருந்தா வாங்கலே'.. கம்பீரமாக நின்ற யானை.. மிரண்டு போன டிரைவர்கள்!
ஈரோடு: சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்கள், டாக்சிகள் இயங்குவதற்கும் நாளை காலை வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் புலம்பி தவித்தாலும் விலங்குகளுக்கு இது நன்மையாக அமைந்துள்ளது.

விலங்குகளுக்கு ஜாலி
ஊரடங்கு காரணமாக வாகனங்களின் இயக்கம் வெகுவாக குறைந்து விட்டன. இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மேட்டுப்பாளையம்-ஊட்டி, வத்தலகுண்டு-கொடைக்கானல், சேலம்-ஏற்காடு, சத்தியமங்கலம் -மைசூரு உள்ளிட்ட பல்வேறு மலை வழிப்பாதையில் குரங்குகள், யானைகள் உள்ளிட்ட விலங்குகள் ஜாலியாக சுற்றித் திரிகின்றன.

கம்பீரமாக நின்ற யானை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. தமிழகம்-கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் இல்லாததால் பகல் நேரங்களில் கூட யானைகள் குடும்பத்துடன் சுதந்திரமாக உலா வருகின்றன. இந்த நிலையில் இன்று அதிகாலை ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை ஒன்று சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே கம்பீரமாக வலம் வந்தது.

பீதியடைந்த வாகன ஓட்டிகள்
அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறிக்கும் வகையில் காட்டு யானை சாலையின் நடுவே சிறிது நேரம் நின்றது. இதனை கண்டு அச்சமடைந்த சரக்கு வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையில் நிறுத்தினர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ஒற்றை யானை சாலையில் நின்ற சரக்கு லாரியை நோக்கி மெதுவாக நடந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பீதி அடைந்த லாரி டிரைவர் தனது லாரியை பின்னோக்கி நகர்த்தினார்.

வனத்துறையினர் அறிவுறுத்தல்
சிறிது நேரம் சாலையில் அங்கும் இங்கும் நடமாடிய காட்டு யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதைத்தொடர்ந்து சரக்கு வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன. காட்டு யானைகள் பகல் நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மித வேகத்தில் இயக்கும்படி வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏர் ஹாரன் எனப்படும் காற்று ஒலிப்பான்களை ஒலிக்க வேண்டாமென வனத்துறையினர் வாகன ஓட்டிகளிடம் வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications