எண்ணெய் தேய்த்தால் அழியுதே.. ஈரோடு கிழக்கில் வாக்காளர்களுக்கு வைத்த மை அழிவதாக அதிமுக பரபர புகார்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை அழிவதாக அதிமுக புகாரளித்துள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குகளை செலுத்திய வாக்காளர்களின் விரல்களில் வைக்கப்பட்ட மை அழிவதாக அதிமுக பரபரப்பு புகாரை வழங்கி இருக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மை அழிவதாக அதிமுக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரதான கட்சி வேட்பாளர்கள், சிறிய கட்சி வேட்பாளர், சுயேட்சைகள் என மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சி மேனகாவை, தேமுதிக ஆனந்தையும் நிறுத்தியது.

வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். துணை ராணுவம், காவல்துறை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு பலத்த கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதிமுக புகார்
இந்த நிலையில் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு விரலில் அடையாளமாக வைக்கப்படும் அழியாத மை அழிவதாக அதிமுக தேர்தல் ஆணையத்திடமே புகாரளித்து உள்ளது. வாக்களித்து சென்ற வாக்காளர்களின் விரலில் எண்ணெய் தேய்த்தால் மை அழிவதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது.

மை அழிகிறதா?
இதுகுறித்து தெரிவித்து உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிமுகவின் புகாரை தொடர்ந்து அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக தெரிவித்து இருக்கிறார். பொதுவாக கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதை தவிர்க்க அடையாள மை விரலில் பூசப்படும் அது அழிவதாக அதிமுக கொடுத்துள்ள புகாரால் ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுக வேட்பாளர் விளக்கம்
இந்த நிலையில் கருங்கல்பாளையம் பகுதியில் வாக்களித்த அதிமுக வேட்பாளர் தென்னரசு, விரலில் வைக்கப்பட்டு உள்ள மை அழியவில்லை என்று தெரிவித்து இருக்கிறார். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் தன்னுடைய கையில் வைக்கப்பட்ட மை அழியவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications