"இவங்களை" பிடிங்க.. ஈரோடு கிழக்கு "ரிசல்ட்டை" மாற்ற போவதே இவங்கதானாம்.. அதிமுக குறி.. சீறும் திமுக
ஈரோடு கிழக்கில் செங்குந்த முதலியார்கள் வாக்குகளை பெற திமுக, அதிமுக இரண்டு தரப்பும் தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் அதிமுக முக்கியமான திட்டம் ஒன்றை வகுத்து உள்ளதாக அந்த கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். எதிர் தரப்பில் பல்வேறு முனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து பலர் கழன்று கொண்டதால் திமுக vs அதிமுக vs நாம் தமிழர் vs தேமுதிக என்று தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக மாறி உள்ளது.
அதிமுக பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிய நிலையில் பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் மூலம் கே.எஸ் தென்னரசு வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

பொதுக்குழு
இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அமமுக அறிவித்துள்ளது. தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அமமுக அறிவித்துள்ளது. அதேபோல் இந்த தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்றும் முன்பே அறிவித்துவிட்டது. பாஜகவும் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அதிமுகவை ஆதரிக்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் கே. எஸ் தென்னரசுவை ஆதரிக்கிறோம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார். ஈரோடு கிழக்கில் இதனால் 4 முனை போட்டி உறுதியாகி உள்ளது.

4 முனை போட்டி
இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் ஈரோடு கிழக்கில் செங்குந்த முதலியார்கள் வாக்குகளை பெற திமுக, அதிமுக இரண்டு தரப்பும் தீவிரமான முயற்சிகளை செய்து வருகிறது. ஈரோடு கிழக்கில் ஏற்கனவே திமுக வென்றதால் இங்கே எப்படியும் மீண்டும் வென்றுவிட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள்.

தேர்தல் முடிவு
6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள். கவுண்டர்களை விட செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தேர்தல் முடிவை தீர்மானிக்கிறார்கள் என்பதால் அவர்களின் வாக்குகளை கவர அதிமுக, திமுக தரப்பு இரண்டும் முடிவு செய்துள்ளதாம். முக்கியமாக அதிமுக சார்பாக முதலியார் பிரிவை சேர்ந்த மாஜி ஒருவரை இங்கே களமிறக்க எடப்பாடி முடிவு செய்துள்ளாராம். அந்த முதலியார் பிரிவு தலைவர்தான் பாஜகவிற்காக முதலியார்கள் இருக்கும் வார்டுகளில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

பிரச்சாரம்
இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தாழ்த்தப்பட்ட மக்கள் விசிக கூட்டணி காரணமாக திமுகவிற்கு ஆதரவாகவே வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவர்கள் வாக்கும் திமுகவிற்குத்தான் செல்லும். இதனால் முதலியார்கள் வாக்குகளே முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும். அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும். பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று எடப்பாடியும் கூறிவிட்டதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே 36 சதவிகிதம் உள்ள செங்குந்த முதலியார்கள் யார் பக்கம் செல்கிறார்கள் என்பதை பொறுத்தே இங்கு முடிவுகள் அமையும் என்பதால் அவர்களை பிடிக்க இரண்டு தரப்பும் முயன்று கொண்டு இருக்கிறது.












Click it and Unblock the Notifications