இன்ஜினியரிங் கல்லூரி மாணவி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை.. ஈரோடு அருகே ஷாக்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அருகே, அரசு பொறியியல் கல்லூரியில் படித்து வந்த 3-ம் ஆண்டு மாணவி, கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த ராமேஷ் என்பவரின் மகள் வர்ஷா, ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் பயின்று வந்த வர்ஷா, கல்லூரியில் தனி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார்.

இரவு உணவு
இந்நிலையில், மாணவி வர்ஷா, நேற்று இரவு வழக்கமாக உணவு சாப்பிட்ட பின்னர் தனது அறைக்குச் சென்றுள்ளார். அறையின் கதவை உள்பக்கமாக பூட்டிய மாணவி வர்ஷா, அறையில் இருந்த ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அறைக்கு வந்த சக மாணவிகள், கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்தனர். கதவை பலமுறை தட்டியுடம், சத்தமிட்ட பின்னரும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், உடனடியாக கல்லூரி முதல்வர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஈரோடு எஸ்பி விசிட்
இதனையடுத்து, கல்லூரி முதல்வர் முருகேசன், உடனடியாக சித்தோடு காவல் நிலையத்தில், மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார். கல்லூரி முதல்வர் அளித்த புகாரில், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கணகேஸ்வரி, பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, பவானி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்னம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீஸ் விசாரணை
தற்கொலை செய்துகொண்ட மாணவி வர்ஷா தங்கியிருந்த அறையை போலீசார் சோதனை செய்தனர். பின்னர், மாணவியின் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோருக்கு இதுதொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

காரணம்
மாணவி வர்ஷா எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? இந்த தற்கொலைக்கு காரணம் மர்மமாக உள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சக மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவருடன் பயின்ற கல்லூரி மாணவிகளிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications