அடுத்தடுத்து பாயும் வழக்குகள்.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர் சீதாலட்சுமிக்கு நெருக்கடி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு சிந்தன் நகர், ஜீவா நகர் பகுதிகளில் அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்ததாக சீதாலட்சுமி மீது கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக போட்டியிடுகிறார். அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியினர், வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சின்னம் என்ன என்பது தெரியாத நிலையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இன்றுதான் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட உள்ளது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் நேற்று நாதக வேட்பாளர் சீதாலட்சுமி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதால் ஈரோடு மத்திய பேருந்து நிலையத்துக்கு சென்ற போலீசார், நாதக வேட்பாளரிடம் அனுமதி பெற்று பிரசாரத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். ஆனாலும், நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது, தேர்தல் பிரிவு அதிகாரிகள், ஈரோடு டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக, நாதக வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீதும் BNS-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாரும், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, நேற்று மாலை சிந்தன் நகர், ஜீவா நகர் பகுதிகளில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததற்காக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்படுவதாக நாதக வேட்பாளர் சீதாலட்சுமி குற்றம்சாட்டினார். "எனது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகும், பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தராமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் என்னை பிரச்சாரம் செய்யவிடாமல் திமுகவினர் தடுக்கின்றனர். அதற்கு போலீசாரும், அதிகாரிகளும் துணை போகின்றனர். இது அராஜகத்தின் உச்சம்." என்றார்.
நாம் தமிழர் கட்சியினரின் குற்றச்சாட்டை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா மறுத்துள்ளார். ஆன்லைன் மூலமாக பிரச்சாரத்துக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாரபட்சம் இன்றி அனுமதி வழங்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications