உஷ்ஷப்பா.. உஷ்ணம் குறைகிறது! இன்றுடன் ஈரோடு மக்கள் “ஃப்ரீ” - மாலை ஓய்கிறது இடைத்தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் இன்று மாலையுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதன் காரணமாக இன்று அனைத்து பிரதான கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
கட்சிகளுக்கு இடையேயான வார்த்தை போர்கள் தொடங்கி கைகலப்புகள், மோதல்கள் என கடந்த சில நாட்களாக கலைகட்டி இருந்த ஈரோட்டில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய உள்ளது.

திருமகன் ஈவேரா மறைவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா, கடந்த ஜனவரி மாதம் 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை அடுத்து தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கு தொகுதியை காலியானதாக அறிவித்தது.

காங்கிரஸ் போட்டி
அதற்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சி திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனையே வேட்பாளராக அறிவித்தது.

அதிமுக வேட்பாளர் தென்னரசு
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டியது. கூட்டணி கட்சியான பாஜக இதில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவை அறிவித்தது. மறுபக்கம், செந்தில் முருகனை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிமுக வேட்பாளராக அறிவித்தது. இதனால் இரட்டை இலை சின்னமே முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

தேமுதிக, நாம் தமிழர்
இதனை அடுத்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார் தென்னரசு. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் இந்த தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி கடந்த 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

மொத்த வேட்பாளர்கள்
இதனை அடுத்து வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலில் சுயேட்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அனல் பறக்கும் பிரச்சாரம்
அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் வீடு வீடாக சென்று வாக்கு வேட்டை நடத்தினர். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதேபோல் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா தலைமையிலான மூத்த நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

இன்று ஓய்கிறது பிரச்சாரம்
கடந்த ஒரு மாதமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் அனல் பறந்துகொண்டு இருந்தது. பல மாவட்டங்களில் இருந்து வந்த அரசியல் கட்சியினரின் வருகையில் திக்குமுக்காடி இருந்த ஈரோட்டில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. எனவே இன்று மாலைக்கு வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications