ஒரு நாளும் நடக்காது.. அதிமுகவை வீழ்த்தும் சக்தி திமுகவுக்கு எப்போதும் இருந்தது இல்லை! எடப்பாடி பன்ச்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளருக்கு எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்தார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்தார். அப்போது அவர் திமுக ஆட்சியையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாகத் தாக்கி பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் கொஞ்ச காலமே இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு சில வாரங்களே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளன.
ஆளும்கட்சி என்பதால் இடைத்தேர்தலில் வெல்வதை திமுக முக்கியமாகக் கருதுகிறது.. அதேநேரம் இடைத்தேர்தலில் வென்று ஆளும் தரப்புக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்ற முனைப்பில் அதிமுக களமிறங்குகிறது. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

ஈரோடு கிழக்கு
இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர் அறிவிக்கும் முன்னரே திமுகவினர் பிரசாரத்தில் இறங்கினர். மூத்த அமைச்சர்கள் பலரும் ஈரோடு கிழக்கில் முகாமிட்டுள்ளனர். அதேநேரம் அதிமுகவில் முதலில் குழப்பமே நிலவியது. ஓபிஎஸ் தரப்பிலும் வேட்பாளர் செந்தில் முருகன் வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்குப் பின்னரே வேட்பாளரில் தெளிவு ஏற்பட்டது. ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

சூடுபிடிக்கும் தேர்தல் களம்
தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அவருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. டிடிவி தினகரன் தங்களுக்குக் குக்கர் சின்னம் ஒதுக்கப்படவில்லை என்பதால், அமமுக போட்டியிடாது என்று அறிவித்துவிட்டார்.. இதனால் நீண்ட காலத்திற்குப் பிறகு, அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குக் கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த முறையில் ஈரோடு கிழக்கில் மொத்தம் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். வரும் பிப். 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே நேற்று ஈரோடு கிழக்கில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, "ஈரோடு வளர்ச்சி பணிகளுக்காக நாங்கள் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.. ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்ல 4 வழிச்சாலையை அதிமுக ஆட்சியில் தான் அமைத்தோம்.. ஈரோடு- பள்ளிப்பாளையம் இணைப்புப் பாலம் அமைக்கப்பட்டதும் அதிமுக ஆட்சியில் தான்.. திமுக ஆட்சிக்கு வந்து இப்போது 21 மாதங்கள் ஆகிவிட்டது.. இதுவரை அவர்கள் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை.

ஒரு அமைச்சராவது வந்தார்களா
இப்போது நீங்கள் பார்க்கலாம்.. ஈரோட்டில் அமைச்சர்களே வந்து வீதி வீதியாக அலைகிறார்கள்.. இவை எல்லாம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தான்.. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பு, ஒரு அமைச்சராவது இங்கு வந்துள்ளனரா.. உங்களை வந்து பார்த்துள்ளனரா.. அப்படி அவர்கள் வந்திருந்தால்.. நீங்கள் அடிப்படைத் தேவைகள் இல்லாமல் இன்று கஷ்டப்பட்டிருக்க மாட்டீர்கள்.. இப்போது தேர்தல் வந்துவிட்டதால் தான்.. அவர்கள் வீதி வீதியாகச் சுற்றுகிறார்கள்.. பரோட்டா போட்டு, தோசை சுடுகிறார்கள்.. இதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள்.

திமுகவுக்கு இல்லை
திமுக ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியே சென்னையில் இருந்து அனைத்து அமைச்சர்களும் இங்கு வந்து முகாமிட்டுள்ளனர்.. கையோடு ஒவ்வொரு அமைச்சரும் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருந்தால் கூட மக்கள் பயனடைந்திருப்பார்கள்.. அதிமுகவை எதிர்க்கும் சக்தி இதுவரை திமுகவுக்கு இல்லை.. கூட்டணி வேட்பாளரை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ஏதேதோ செய்கிறார்கள்.. கொட்டகை அமைத்து மக்களை அடைத்து வைத்துள்ளனர்.

முதியோர் உதவித் தொகை
இங்கு ஏதோ எட்டிய தூரம் வரை அதிமுக தெரியவில்லை என்கிறார் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி.. அதன் பிறகு ஏன் பிரசாரம் என்ற பெயரில் மக்களை அடைத்து வைத்துள்ளனர். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகிவிட்டது.. இந்த காலகட்டத்தில் நீங்கள் மக்கள் வரிப்பணத்தை எடுத்து.. உங்கள் அப்பாவுக்கு நினைவு மண்டபம் கட்டினார்கள்.. அதேநேரம் சுமார் 7.5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகையை நிறுத்தியுள்ளீர்கள்.. பேனா சிலை காசை எடுத்து முதியோருக்கு உதவித் தொகையாகக் கொடுக்கலாமே" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications