67 பேர் ‛டக்அவுட்’.. ஷாக் கொடுத்த தபால் ஓட்டு.. ஈரோடு கிழக்கில் சமாஜ்வாதியை விட மோசமான தேமுதிக!
ஈரோடு கிழக்கு ஓட்டு எண்ணிக்கையின்போது 25 தபால் ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட 77 வேட்பாளர்களில் 67 பேர் ஒரு தபால் ஓட்டுகளை கூட பெறவில்லை. மேலும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளருக்கு 2 தபால் ஓட்டுகள் கிடைத்த நிலையில் தேமுதிக வேட்பாளருக்கு ஒரு தபால் ஓட்டு மட்டுமே கிடைத்துள்ள நிலையில் மொத்தம் 25 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு கிழக்கில் கடந்த மாதம் 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்டவர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. மொத்தம் 398 தபால் ஓட்டுகள் பதிவாகின.

காங்கிரசுக்கு அதிக தபால் ஓட்டு
தபால் ஓட்டுகள் எண்ணும்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற தொடங்கினார். மொத்தம் 398 தபால் ஓட்டுகளில் 250 திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கிடைத்தது. இதற்கு அடுத்தபடியாக அதிமுகவின் தென்னரசுவுக்கு 104 ஓட்டுகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு 10 தபால் ஓட்டுகளும் கிடைத்தது.

பின்தங்கிய தேமுதிக
விஜயகாந்தின் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஒரு தபால் ஓட்டு மட்டுமே கிடைத்தன. இருப்பினும் அந்த தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் கருணாகரன் 2 தபால் ஓட்டுகளை பெற்றார். இதன்மூலம் தபால் ஓட்டு எண்ணிக்கையிலும் தேமுதிக வேட்பாளர் ஆனந்த் பின்தங்க தொடங்கினர்.

67 பேருக்கு பூஜ்யம்
மேலும் தபால் ஓட்டுகளை பொறுத்தமட்டில் 25 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதோடு போட்டியிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 67 வேட்பாளர்களுக்கு ஒரு தபால் ஓட்டு கூட கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தபால் ஓட்டு எண்ணிக்கையில் வாக்குகள் எதுவும் பெறவில்லை.

ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி
இறுதியாக ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸின் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனால் 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு 43, 981 வாக்குகளுடன் பின்தங்கி தோல்வியடைந்தார். இருப்பினும் அவர் டெபாசிட் தொகையை தக்க வைத்தார்.

டெபாசிட் இழந்த நாம் தமிழர், தேமுதிக
இந்த தேர்தலில் 3வது இடத்தில் நாம் தமிழர் கட்சியின் மேனகா உள்ளார். மேனகா 10,804 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 1,301 வாக்குகள் பெற்று 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இருப்பினும் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா, தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஆகியோர் டெபாசிட் இழந்தனர்.












Click it and Unblock the Notifications