ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சுயேட்சைகள் உள்பட 77 வேட்பாளர்கள் போட்டி.. சின்னம் ஒதுக்கீடும் நிறைவு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். இதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு இன்று சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒருவருக்கு மேல் ஒரே சின்னத்தை கேட்டு இருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார்.
இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

83 பேரின் வேட்புமனுக்கள்
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக சுயேச்சைகளையும் சேர்த்து 96 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இவற்றில் 83 பேரின் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அந்தக் கட்சிக்கு உள்ள சின்னம் ஒதுக்கப்பட்டும். அதாவது காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னம், அதிமுகவிற்கு இரட்டை இலை என அந்தந்த கட்சிகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விடும்.

இன்றுடன் அவகாசம் நிறைவு
சுயேட்சை வேட்பாளர்களும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கோதாவில் குதித்துள்ளனர். வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 3 மணியுடன் நிறைவு அடைந்தது. மொத்தம் 83 பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு இருந்த நிலையில் அமமுக வேட்பாளர் உள்பட 6 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். அதன்படி 77 வேட்பாளர்கள் தற்போது ஈரோடு களத்தில் நிற்கின்றனர். தேர்தல் போட்டி களத்தில் நிற்கும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் சின்னம்
இதற்காக நேற்று இடைத்தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னங்கள் வேட்பாளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதை சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு தங்களுக்கு பிடித்த 3 சின்னங்களை குறித்து வைத்ததை பார்க்க முடிந்தது. இந்த 3 சின்னங்களில் ஏதேனும் ஒரு சின்னம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு வழங்கப்படும். ஒரே சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்டவரக்ள் கேட்டு இருந்தால் குலுக்கல் முறையை பின்பற்றி சின்னம் ஒதுக்கப்படும்.

சுயேட்சை வேட்பாளர்களை பொறுத்தவரை
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியான கே சிவக்குமார் கூறும் போது, "அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அந்தக் கட்சிகளின் சின்னங்கள் கிடைத்து விடும். பதிவு செய்த அரசியல் கட்சியினருக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கும். சுயேட்சை வேட்பாளர்களை பொறுத்தவரை அவர்கள் விரும்பும் சின்னங்கள் ஒதுக்கப்படும். இதற்கான நடைமுறைகள் இன்று தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின் படி நடைபெறும்" என்று கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications