"மையாவது மண்ணாங்கட்டியாவது”.. என் மை அழியலயே! காமராஜர் சொன்னதை சொல்லி அதிமுகவை கலாய்த்த இளங்கோவன்
தன்னுடைய கையில் மை வைத்து 10 நிமிடமாகியும் அழியவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து இருக்கிறார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்ட மை அழிவதாக அதிமுக குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், தன்னுடைய கையில் மை வைத்து 10 நிமிடமாகியும் அழியவில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்து இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
வரும் மார்ச் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும் திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

விறுவிறு வாக்குப்பதிவு
அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா, தேமுதிக வேட்பாளராக ஆனந்த் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மை அழிவதாக புகார்
காலையில் இருந்தே வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடியில் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு விரலில் அடையாளமாக வைக்கப்படும் அழியாத மை அழிவதாக அதிமுக புகாரளித்து இருக்கிறது.

தேர்தல் அதிகாரி விளக்கம்
எண்ணெய் தேய்த்தால் வாக்காளர்களின் விரலில் வைக்கப்பட்டு இருக்கும் மை அழிவதாக பரபரப்பு புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தெரிவிக்கையில், அதிமுகவின் புகாரை தொடர்ந்து அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டதாக விளக்கமளித்து இருக்கிறார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்
தேர்தலில் கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதை தடுக்க வாக்காளர்களின் விரல்களில் அடையாள மை பூசப்படும் நிலையில் அது அழிவதாக அதிமுக புகார் அளித்து இருப்பதால் ஈரோடு கிழக்கு தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கச்சேரி வீதியில் வாக்களித்த காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள்.

தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது
இதற்கு பதிலளித்த அவர், "தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருக்கிறது. செயல்படவில்லை என்று சொல்லிவிட முடியாது. அனுமதி பெறாமல் செயல்பட்ட சில அலுவலகங்களை மூடினார்கள். அதில் எதிர்க்கட்சி, ஆளும் கட்சி பேதங்கள் இன்றி செயல்பட்டார்கள். தேர்தல் என்பது நல்லபடியாக நேர்மையாக நடக்கிறது." என்றார்.

மையாவது மண்ணாங்கட்டியாவது
மை அழிகிறது என்ற அதிமுகவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "என்னுடைய மை வைத்து கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் ஆகிவிட்டது. இன்னும் அப்படியேதான் இருக்கிறது. மையை பற்றி ஏற்கனவே காமராஜர் தோற்றபோது அவரிடம் சொன்னார்கள் மை சரியில்லை என்று. 'மையாவது மண்ணாங்கட்டியாவது. மக்கள் வாக்களித்து உள்ளார்கள். அவர்கள் ஜெயித்து உள்ளார்கள். ஆகவே அநாவசியமாக குற்றச்சாட்டை வைக்காதீர்கள்.' என்று சொல்லி இருக்கிறார்கள். அதே வாதம் இப்போதும் பொருந்தும்." என்றார்.












Click it and Unblock the Notifications